பாலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் சேகர் ராவ்ஜினி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ஏராளமான இந்தி படங்களுக்கு விஷாலுடன் இணைந்து இசையமைத்துள்ளார். விஷால் - சேகர் என இவர்கள் கூட்டணியில் இதுவரை ஏராளமான இந்தி படங்கள் ரிலீசாகியுள்ளது.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர்:
1999ம் ஆண்டு முதல் இவர்கள் இந்தியில் பிரபலமான இசையமைப்பாளராக உள்ளார். ஹ்ரி்ததிக் ரோஷனின் ஃபைட்டர், வார், ஷாருக்கானின் பதான்,ரா ஒன், சல்மான்கானின் டைகர் ஜிந்தா ஹாய் என பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். விஷாலுடன் இணைந்து பல படங்களுக்கு வெற்றிகரமாக இசையமைத்த சேகருக்கு தமிழில் இசையமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் விருப்பம் ஆகும்.
தமிழில் ஆல்பம்:
இதையடுத்து, அவர் தமிழில் தனது இசையில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். சேகர் தனக்கு சொந்தமாக கருடா மியூசிக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் சேகர் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். பையா பையா என்ற இந்த பாடலை இளம் பாடகி ஆராதனா பாடியுள்ளார். கருடா மியூசிக் - குளோபல் ஸ்கூல்ஸ் குழுமம் இணைந்து இந்த பாடலை தயாரித்துள்ளனர்.
ரஜினியுடன் பணியாற்ற ஆர்வம்; இளையராஜா மீது மரியாதை:
தமிழில் தனது முதல் ஆல்பம் பாடல் வெளியானது குறித்து பேசிய இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி, இளம் கலைஞர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்து உரிய வழிகாட்டுதலுடன் அவர்களின் திறமையை வெளிக்கொணர்வதே கருடா மியூசிக் நிறுவனத்தின் நோக்கம். இது ஒரு நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய இசைப்பயணத்தில் மகத்தான பங்காற்றிய இளையராஜா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறேன். இசை மொழி, எல்லைகளை கடந்து அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஹ்ரித்திக் ரோஷனின் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் தான் ரஜினி படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும், இளையராஜா மீது மதிப்பு வைத்திருப்பதாகவும் கூறியிருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.