பிரபலங்கள் அவ்வப்போது தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவார்கள். சமந்தா, சரத் குமார், டொவீனோ தாமஸ் போன்றவர்கள் தொடர்ந்து தங்களின் ஜிம் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். அப்படித்தான் சிம்புவின் உடல் எடை குறைக்கும் வீடியோ வைரலானது. ஆட்மன் (Atman) என பெயரிடப்பட்ட அந்த வீடியோவில், உடல் எடையை105 கிலோவில் இருந்து 72 கிலோ வரை எப்படி குறைத்தார் என்பதை காண்பித்திருந்தார். 


அப்படி, சில பாலிவுட் நடிகர்களின், ‘எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்’ என நம்ப முடியாத உடல் எடை குறைப்பு மாற்றத்தை ( Transformation) பார்க்கலாம்.


பரினிதி சோப்ரா



The Girl on the Train படத்தின் நாயகி பரினிதி சோப்ரா ஒரு காலத்தில் அதிக எடையுடன் இருந்துள்ளார். அவரது முதல் படமான Kill Dil 2014ல் வெளியானது. ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகுதான் தன் உடல் எடையை கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் குறைத்துள்ளார் பரினிதி. 


அலியா பட்



தற்போது ஒல்லி பெல்லியாக காட்சியளிக்கும் அலியா பட்  Student of The Year  படத்திற்காக ஆறே மாதங்களில் 16 கிலோ எடையை குறைத்துள்ளார். அதன்பிறகு கல்லி பாய் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சாலையோர துரித உணவுகள் அலியா பட்டிற்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் தற்போது அதையெல்லாம் அறவே தவிர்த்து விட்டு தனது டயட்டில் கவனம் செலுத்தி வருகிறாராம். 


சோனாக்‌ஷி சின்ஹா



சோனாக்‌ஷி சின்ஹாவிற்கு 18 வயதாக இருந்தபோது 30 நொடிகள் ட்ரெட் மில்லில் ஓடவே பயங்கர சிரமப்படுவாராம். அந்த அளவிற்கு ஓவர் வெய்ட்டாக இருந்துள்ளார். பள்ளி நாட்களில் அதிக எடையுடன் இருந்த காரணமாக சக மாணவர்கள் கிண்டலடிப்பார்களாம். அதன்பிறகு சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை குறைத்துள்ளார் சோனாக்‌ஷி. ஆனாலும் பீட்சா ரொம்ப பிடிக்கும் என்பதால் அது மட்டும் அவ்வபோது சாப்பிடுவாராம். 



சாரா அலிகான்



 இவருக்கு PCOS பிரச்னை இருந்துள்ளது. இதனால் உடல் எடையை சீராக பராமரிப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருந்துள்ளது. ஒரு நேர்காணலில்  “உடலை ஏற்றுக் கொள்வது, body positivity எல்லாம் பேசலாம். ஆனால் ஒரு படத்தில் நாயகி 96 கிலோ எடையுடன் இருந்தால் யாரும் அப்படத்தை விரும்பி பார்க்கமாட்டார்கள்” என சொன்னார். அப்படித்தான் PCOS பிரச்சினை இருந்தாலும் 98 கிலோவாக இருந்த எடையை குறைத்தார் சாரா அலிகான். 


அர்ஜுன் கபூர்



அர்ஜுன் கபூர், அலியா பட்டுடன் 2 States படத்தில் நடித்துள்ளார். 50 கிலோ எடையை குறைக்க 3 வருடங்கள் தேவைப்பட்டதாம் இவருக்கு. மற்ற பாலிவுட் நடிகர்கள் போல எப்போதும் உடற்பயிற்சி செய்பவரல்ல அர்ஜுன் கபூர். அதே நேரம் தனது உடலுக்கு தேவையான பயிற்சியை கொடுக்க தவறுவதும் இல்லையாம்.


கணேஷ் ஆச்சரியா



Any Body Can Dance படத்தில் பலருக்கும் இவரை பிடிக்கும். சிங்கம், பாடிகாட் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். டயட்டின் மூலமாக மட்டுமே 98 கிலோ எடையை குறைத்தாராம்.  மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உண்பாராம். அதற்கு பின் எந்த உணவையும் எடுத்துக்கொள்ள மாட்டாராம். 


ஜரீன் கான்



ஜரீன் கான் பாலிவுட் மட்டுமல்லாது சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டுக்கு வந்த புதிதில் பலரும் இவரை கிண்டல் செய்தார்களாம். 100 கிலோ எடையுடன் இருந்த ஜரீன் கான் தற்போது அதை 57 கிலோவாக குறைத்துள்ளார்.