நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பெரிய நெகமம் பேரூராட்சியில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்தலுக்கு முன்பே பெரிய நெகமம் பேரூராட்சியை போட்டியின்றி பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது. இதனால் மீதமுள்ள 802 பதவிகளுக்கு கடந்த 19 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 3 ஆயிரத்து 366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க இருந்தனர். 




கோவை மாவட்டத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் 59.61 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாநகராட்சி பகுதியில் 53.61 சதவீதமும், நகராட்சிகளில் 67.09 சதவீதமும், பேரூராட்சிகளில் 73.83 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நகரப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 17 மையங்களில் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு இடத்திலும், 7 இடங்களில் நகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும், 9 இடங்களில் பேரூராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


கோவை மாநகராட்சி


கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 778 வேட்பாளர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 15 இலட்சத்து 65 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 8 இலட்சத்து 39 ஆயிரத்து 109 பேர் வாக்களித்தனர். கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது.


காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. மொத்தம் 10 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு அறைக்கு 14 மேசைகள் போடப்பட்டு இருக்கும். 10 அறைகளுக்கு 140 மேஜைகள் என ஒரு மணி நேரத்திற்கு 140 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்பட உள்ளன. இதனால் 9 அல்லது 10 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேயர் வாய்ப்பு 


கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் போட்டியாக இல்லாமல், கெளரவப் பிரச்சனையாக மாறியுள்ளது. கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க அதிமுகவும், கடந்த சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பழிதீர்க்க திமுகவும் கடுமையாக போராடி வருகின்றன.


இது மட்டுமில்லாமல் கோவையில் அதிகாரமிக்கவராக விளங்கி வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதிக்கத்தை, அமைச்சர் செந்தில்பாலாஜி முடிவுக்கு கொண்டு வருவாரா என்ற கேள்வி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.


கோவையில் ’கரூர் பார்முலா’ எடுபடுமா? பார்முலாவை அதிமுக பார்முலா வீழ்த்துமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.




கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 5 முறை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 3 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் இருந்த போது 2 முறை நடந்த தேர்தல்களில் மேயர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கே வழங்கியுள்ளது. அதனால் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒரு முறை மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. முதல் முறையாக மேயர் பதவியை நேரடியாக கைப்பற்றும் முனைப்போடு திமுக களமிறங்கியுள்ளது. மேலும் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 


திமுகவை பொறுத்தவரை மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னாள் சட்டமன்ற கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி கார்த்திக், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதியின் 22 வயது மகள் நிவேதா, அமிர்தவள்ளி சண்முகசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் மீனா லோகு ஆகியோர் மேயர் பதவிக்கான பந்தயத்தில் உள்ளனர். 3 வது முறையாக மேயர் பதவியை கைப்பற்றி, தக்க வைக்க வேண்டுமென அதிமுக முயற்சித்து வருகிறது.


தொடக்கத்தில் இருந்து கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை இணைச் செயலாளர் சர்மிளா சந்திரசேகர் மேயராக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியான கிருபாலினி கார்த்திகேயனுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பான்மை கிடைத்தால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கைகாட்டும் நபரே அதிமுகவில் மேயராக வாய்ப்புள்ளது. 


இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் போது தெரியவரும்.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ABPநாடு தளத்துடன் இணைந்திருக்கவும் - https://tamil.abplive.com/