ஸ்ரீ ராம ஜென்ம பூமியின் வரலாறு பற்றியும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை பற்றியும் ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளது ராமர் கோயில் அறக்கட்டளை. இந்த திரைப்படத்தின் கதை சொல்லியாக பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் மாற இருக்கிறார் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
படக்குழு உறுப்பினர்கள் :
படத்தின் திரைக்கதை தொடங்கி தயாரிப்பு பணிகள் வரை அனைத்தையும் மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு தலைவர், திரைப்பட இயக்குனர் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி, எழுத்தாளர் யதீந்திர மிஸ்ரா, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் செயலாளர் சச்சிதானந்த ஜோஷி மற்றும் எழுத்தாளர் பிரசூன் ஜோஷி ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள். அமிதாப் பச்சன் இப்படத்தின் ஒரு அங்கமாக இருக்க போவதால் ரசிகர்களுக்கு இப்படம் குறித்த எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபலமான தொடர்கள் :
ராம ஜென்ம பூமியின் நூற்றாண்டு கால வரலாற்றைப் பற்றியும் ராமர் கோயில் கட்டுமான செயல்முறை பற்றியும் எடுத்துரைக்கும் இந்த திரைப்படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. 1991ம் ஆண்டு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பான 'சாணக்கியா' தொடரை இயக்கியவர் சந்திரபிரகாஷ் திரிவேதி. அவரே அந்த தொடரில் சாணக்யாவாக நடித்தார். மேலும் அக்ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான 'சாம்ராட் பிருத்விராஜ்’ என்ற தொடரையும் இயக்கி இருந்தார்.
ராமர் கோயில் கட்டுமான பணிகளின் விவரம் :
ராமர் கோயிலின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறக்கட்டளையின் தகவலின் படி கோயிலின் 20% கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 4.75 லட்சம் கன அடி பன்சி பஹர்பூர் கல், கோயிலின் மேல் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு ஒரு சிறப்பான அம்சம் உண்டு. ராம நவமி நாளில், சூரியனின் கதிர்கள் மதியம் 12 மணிக்கு ராமரின் நெற்றியில் விழும். இதை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் புனே டெம்பிள் ஆர்கிடெக்ட் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்த கோயிலின் கட்டுமான பணிகளை டிசம்பர் 2023ல் முடிக்க திட்டமிட்டுள்ளனர் அறக்கட்டளை நிர்வாகிகள்.