பாலிவுட் மாஃபியாவால் தான் கடுமையாக துன்புறுத்தப்படுவதாகவும், மகாராஸ்டிராவில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படவேண்டும் என்றும் நடிகை தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.
மீ டூ-வில் பரபரப்பை கிளப்பிய தனுஸ்ரீ:
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018ம் ஆண்டு நடந்த மீ டூ இயக்கத்தின் போது பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் அளிக்க செய்திச் சேனல்களின் தலைப்புச் செய்தியானார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பரபரப்பை உருவாக்கியிருக்கிறார் தனுஸ்ரீ தத்தா. இவர் தனக்கு நேர்ந்துள்ள துன்புறுத்தல்களையும், மனக்குறைகளையும் நீண்ட பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கொலை முயற்சி:
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள பதிவில், “நான் துன்புறுத்தப்படுகிறேன்; மிகவும் மோசமாக டார்கெட் செய்யப்படுகிறேன். தயவுசெய்து யாராவது ஏதாவது செய்யுங்கள். கடந்த ஒரு ஆண்டு எனது பாலிவுட் வேலை நாசமானது. பிறகு எனது வீட்டு பணியாள் என் குடிநீரில் மாத்திரைகள் மற்றும் ஸ்டெராய்டுகளைத் தூவியுள்ளார். இதுவே எனது அனைத்துவிதமான தீவிரமான உடல் பிரச்னைகளுக்கும் காரணம். நான் உஜ்ஜயினிக்கு தப்பித்துச் சென்றபோது எனது காரின் ப்ரேக்குகள் இரண்டு முறை உடைந்தன. விபத்தையும் சந்திக்க நேர்ந்தது. அதிர்ஷ்டவசமாக சாவிலிருந்து தப்பித்து 40 நாள்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்காக மும்பைக்குத் திரும்பினேன். தற்போது வித்தியாசமானவைகள் எனது கட்டிடத்திலும், வீட்டிற்கு வெளியேயும் நடக்கின்றன.” என்று கூறியுள்ளார்.
தொல்லைகளின் பின்னணி:
மேலும், “நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதில்லை. இதை எல்லோரும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். நான் எங்கேயும் ஓடிப்போகவும் மாட்டேன். நான் இங்கு தான் இருப்பேன். எனது பொது வாழ்க்கையை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு புதுப்பிப்பேன். பாலிவுட் மாஃபியா, மஹாராஸ்டிராவின் பழைய அரசியல் வட்டம் மற்றும் தீய தேச விரோத கிரிமினல் சக்திகள் ஒன்றாக சேர்ந்து மக்களை தொந்தரவு செய்ய இப்படி செயல்படுகின்றன. என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், என்னால் காட்டிகொடுக்கப்பட்ட மீ டூ குற்றவாளிகள் மற்றும் என்ஜிஓக்கள் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். ஏனெனில் நான் ஏன் இப்படி டார்கெட் செய்யப்படவும், துன்புறுத்தப்படவும் வேண்டும்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மகாராஸ்டிராவில் ராணுவ ஆட்சி:
அதோடு, “நிறைய பேர் என்னை நிராகரிக்க முயற்சிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் நீண்ட காலமாக இன்ஸ்டாவில் பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். இது கடுமையான மன, உடல் மற்றும் உளவியல் துன்புறுத்தல். அநீதிக்கு எதிராக நின்றதற்காக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்றால் என்ன மாதிரியான இடம் இது? என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், “மகாராஸ்டிராவில் குடியரசுத் தலைவர் மற்றும் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அடித்தட்டு விஷயத்தையும் மத்திய அரசே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டம், ஒழுங்கு இருக்காது:
“இங்கு செயல்பாடுகள் எல்லாம் உண்மையாகவே கையை மீறிப் போகின்றன. என்னைப் போன்ற பொதுவானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏதோ ஒரு அசம்பாவிதம் இங்கு நடக்கப்போகிறது. இன்று நான் நாளை உங்களுக்காகவும் இருக்கும். நான் இன்ஸ்டாகிராமில் முன்பு விவாதித்த சில விஷயங்கள் சிலரை தவறான வழியில் காயப்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் மீறி எனது ஆன்மீக சாதனாவை மேலும் ஆழப்படுத்துவேன் & என் மனதை பலப்படுத்துவேன். நான் புதிய தொழில் மற்றும் பணி வாய்ப்புகளில் கவனம் செலுத்தவும், வாழ்க்கையை புதிதாக தொடங்கவும் விரும்புகிறேன். கலைஞர்கள், தனியாக வாழும் பெண்களுக்கு சொர்க்கமாக இருந்த இந்த நகரத்தில் சட்டம், ஒழுங்கு இனியும் இருக்காது” என்று தனது பதிவில் தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர் நானா படேகர் மீதும், நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா மீதும் மீ டூ-வில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.