சோனாக்‌ஷி சின்ஹா


2010 ஆம் ஆண்டு வெளியான ‘ தபாங் ‘ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறவே பாலிவுட்டின் வைரல் நடிகையானார். தொடர்ந்து அக்‌ஷய் குமார் நடித்த ரவுடி ராத்தோர் , பிரபுதேவா இயக்கிய ஆர் ராஜ்குமார் படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. தமிழில் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடித்தார். தேவர்  , ஆக்‌ஷன் ஜாக்ஸன் , ஃபோர்ஸ் 2 , ஷஃபாகானா , கந்தானி என சோனாக்‌ஷி சின்ஹா நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தன. நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ஹீராமண்டி தொடரில் வெற்றியை பதிவு செய்துள்ளார். 


சோனாக்‌ஷி சின்ஹா திருமணம்


சோனாக்‌ஷி சின்ஹா கடந்த 2022 ஆம் ஆண்டு ’டபுள் எக்ஸ் எல் ‘ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவருடன்  நடித்த ஜகீர் இக்பாலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஜோடி காதலில் இருந்து வருகிறது. பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே காணப்பட்டதால சமூக வலைதளத்தில் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபகாலமாக சமூக வலைதளங்கள் தகவல்கள் வெளிவந்தபடி இருந்தது.  தற்போது சோனாக்‌ஷி சின்ஹாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்து வெளியாகி இருக்கும் தகவலின் படி இந்த வதந்திகள் உண்மை என்றும் வரும் ஜூன் 23 ஆம் தேதி சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜகீர் இக்பால் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. 






இருவரும் அவரவர் வீட்டில் பேசி சம்மதம் பெற்றுவிட்டதாகவும் வரும் ஜூன் 23 ஆம் தேதி மும்பையின் பிரபல உணவு விடுதியான பாஸ்டியனில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணம் குறித்து சோனாக்‌ஷி சின்ஹா பெரியளவில் விளம்பரப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் திரையுலகைச் சேர்ந்த தனது நெருங்கி நண்பர்கள் மட்டும் குடும்பத்தினரை மட்டும் இந்த திருமணத்திற்கு அழைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. 


 இந்த திருமணம் முன்பே முடிவு செய்யப் பட்டதாகவும் சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை ஷத்ருகன் சின்ஹா திரிணாமூல் கட்சி சார்பாக போட்டியிட்ட காரணத்தினால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.