பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குபாய் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதோடு, இப்படத்தில் நடித்த ஆலியா பட்டுக்கு பாராட்டுகளை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கின்றது. விரைவில் இத்திரைப்படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஆலியாபட் இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஆலியா பட்டின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் ஆலியா பட். இந்த நிலையில் ராஜமவுலியின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் ஆலியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் உறுதியாகியுள்ளது.
காட்டை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை ராஜமவுலியும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தும் இணைந்து சில மாதங்களாகவே உருவாக்கி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மற்ற வேடங்களுக்கான நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் தான் ஆலியா பட் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர் ஆர் ஆர் திரைப்படத்தைப் போலவே இப்படத்தையும் இந்திய அளவிலான திரைப்படமாக உருவாக்க ராஜமவுலி முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் சரியானதாக முடிந்தால் மகேஷ்பாபுவுடன் முதன் முறையாக ஆலியா பட் ஜோடி சேர்வார். ஆர்ஆர்ஆர் திரைப்படம் போல் அல்லாமல், ஆப்பிரிக்க காடுகளில் உருவாகவிருக்கும் அட்வெஞ்சர் திரைப்படத்தில் அவருக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மகேஷ் பாபு மற்றும் ஆலியா பட்டுக்கு தற்போது கைவசம் இருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பின் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜமவுலியின் திரைப்படங்கள் பெரும்பாலும் கிராபிக்ஸை சார்ந்தே இருக்கும் நிலையில், இந்த திரைப்படம் ஆப்பிரிக்காவில் உள்ள நிஜமான காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.
புஷ்பா திரைப்படத்தை பார்த்த பின் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆலியா பட் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ராஜமவுலி, மகேஷ் பாபு, ஆலியா பட் கூட்டணி இணைந்திருப்பது திரையுலகினரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்