தன்னுடைய நடிப்பு மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்  பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி தன்னுடைய மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அவருடைய ரசிகர்களுக்கு பெரிய இடியாக அமைந்தது. அத்துடன் அவருடைய தற்கொலைக்கு தற்போது வரை தெளிவான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. 


அவருடைய மரணத்திற்கு பிறகு அவருடைய முகநூல் பக்கத்தில் 2020ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி ஒரு பதிவு ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் அந்த பக்கத்தை அவருடைய எண்ணங்களை பிரதிபளிக்கும் பக்கமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு அவருடைய ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. 


 



இந்நிலையில் அந்தப் பக்கத்தில் கடந்த 18ஆம் தேதி அவருடைய பக்கத்தில் பதிவு ஒன்று போடப்பட்டிருந்தது.அத்துடன் அவருடைய ப்ரோஃபைல் படமும் மாற்றப்பட்டிருந்தது. இந்தப் படத்தை மாற்றியதற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சிலர், “யார் இந்த கணக்கை தற்போது நிர்வகித்து வருகிறார்கள்? ஒருவர் இறந்த பிறகு அவருடைய கணக்கை இப்படி பயன்படுத்துவது தவறு. அத்துடன் அவருடைய ரசிகர்களின் எண்னத்தை புரிந்து கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளனர். 


 



மேலும் சிலர் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? யார் அவருடைய பக்கத்தை நிர்வாகித்து வருகிறார்? அவருக்கு எங்களுடைய எண்ணங்கள் புரியவில்லை என்றும் கருத்தை தெரிவித்து வருகின்றனர். 




சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு அவருடைய தந்தை நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் அவரிடம் இருந்து 15 கோடி ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்தார் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை முதலில் மும்பை காவல்துறை விசாரித்து வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கு சிபிஐயிடம் சென்றது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வந்தது. அதில் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒரு மாதம் சிறையில் இருந்த பின்னர் ஜாமீன் பெற்று தற்போது வெளியே உள்ளார். 


மேலும் படிக்க: கே.ஜி.எப். 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்