சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில கான்செப்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும். அந்த வகையில் பீரியாடிக் கதைகள், வரலாற்று சிறப்புமிக்க பிரபலங்களின் பயோபிக் படங்கள் சமீப காலமாக மிகவும்  ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 


இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் போது அது மக்களுக்கு ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு படமாக அமைகிறது. எம்.எஸ். தோனி, தங்கல், 83 உள்ளிட்ட சில விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது. அந்த வகையில் பாராஒலிம்பிக் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தவர் முரளிகாந்த் பெட்கா. அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் 'சந்து சாம்பியன்'. 


 



 


முரளிகாந்த் பெட்கா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிக்க இப்படத்தை இயக்குகிறார் கபீர் கான். இந்த பயோபிக் திரைப்படம் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளார் நடிகர் கார்த்திக் ஆர்யன். அது குறித்து கபீர் கான் பேசுகையில் "மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 'சந்து சாம்பியன்' திரைப்படம் உருவாகி வருகிறது. அதே அளவு இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள கார்த்திக் ஆர்யன் உழைப்பும் ஊக்கமளிக்க கூடியது. 


 



 


ஒரு ஆண்டுக்கு முன்னர் இந்த படத்தை பற்றி அவரிடம் பேசுகையில் இது ஒரு சர்வதேச விளையாட்டு வீரர் சார்ந்த பயோபிக்  என்பதால் அதற்கு ஏற்றார் போல கட்டுக்கோப்பான உடல் அமைப்பை கொண்டு வர வேண்டும் என கூறி இருந்தேன். அதன்படியே  குறுகிய காலகட்டத்தில் எந்த வித ஸ்டெராய்டுகளையும் பயன்படுத்தாமலேயே கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து உடல் எடையை 18 கிலோ வரை குறைத்துள்ளார். அவரின் இந்த விடாமுயற்சியை நினைத்து பெருமை அடைகிறேன். 
'சந்து சாம்பியன்' படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் இந்த  ட்ரான்ஸ்பர்மேஷன் போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்படத்தின் டிரைலர் இன்று (மே 18 ) வெளியாக உள்ளது. 
கார்த்திக் ஆர்யன் 2011ம் ஆண்டு வெளியான 'பியார் கா புஞ்சனாமா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆகாஷ் வாணி , காஞ்சி: தி அன்பிரேக்கபிள், பியார் கா புஞ்சனாமா 2 , சோனு கே திட்டு கி ஸ்வீட்டி , லுகா சுப்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.