Ashok Selvan: இதுக்கு முன்னாடி எனது படத்துக்கு இப்படி ஒரு விசில் பறந்ததே இல்லை என ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி குறித்து நடிகர் அசோக் செல்வன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நடிகர் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படம் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கிய படத்தை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடெக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி கொண்டாடப்பட்டது. படத்தின் இயக்குநர் ஜெயகுமார் மற்றும் பா. ரஞ்சித், பாடகர் அறிவு மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றியை கொண்டாடினர். இதற்கிடையே, ப்ளூ ஸ்டார் படம் உருவான விதம் குறித்து நடிகர் அசோக் செல்வன் பேசியுள்ளார். அதில், “மக்களுக்கு பிடித்தால் தான் ஒரு படம் வெற்றிபெறும். சமூகத்துக்கு தேவையான ஒரு கருத்தை ப்ளூ ஸ்டார் படம் இருக்கும். இந்த படத்தில் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. ரஞ்சித் அண்ணா உள்ளிட்ட டீம் எனக்கு ரொம்ப பிடித்தது. சினிமாவுக்குள் நான் வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது. இது எனக்கு 19வது படம். ப்ளூ ஸ்டார் படத்தில் ரஞ்சித் என்ற கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். முதன் முதலில் எனது படத்தில் ஹீரோ இண்ட்ரோவுக்காக விசில் பறந்ததை பார்த்தேன். இதுக்கு முன்னதாக எந்த படத்திலும் இப்படி இருந்தது இல்லை.
முன்னதாக படத்தின் ஸ்கிரிப்டை நான் படித்தேன். அதில் ரஞ்சித் என்ற கேரக்டர் என்னை தனிப்பட்ட முறையில் ஈர்த்தது. நான் சினிமாவுக்குள் வரும்போது இருந்த தாக்கமும், அதன் முயற்சியும் இந்த படத்தில் இருந்ததை பார்த்தேன். எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும், சரிசமம் என்பதை நான் நினைப்பவன். அதையே படத்தின் கதையாக இருப்பது பிடித்திருந்தது.
படத்தில் எனது நிறத்தை மாற்ற ரொம்ப கஷ்டப்பட்டோம். அரக்கோணம் மிகவும் வெப்பமான பகுதியாக இருந்தாலும், எனது நிறத்தை குறைக்க மெரினா மணலில் எண்ணெய் தடவிக்கொண்டு படுத்திருப்பேன். பின்னர், அரக்கோணத்தில் கிரவுண்டில் ஷூட் நடைபெற்றதால் தானாகவே எனது நிறம் கருமையாக மாறியது” என்றார்.
மேலும் தனது மனைவியும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் குறித்தும் அசோக் செல்வன் பகிர்ந்து கொண்டார். அதில், “ப்ளூ ஸ்டார் படத்தில் நானும், கீர்த்தி பாண்டியனும் காதலர்களாக இருந்தோம். அதனால், ஒருவருக்கு ஒருவர் பேசி எப்படி நடிக்க வேண்டும் என்று விவாதிப்போம். காதலிக்கும்போது திருமணம் செய்ய வேண்டுமா என்ற பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தை வழி நடத்துவது பெரிய பொறுப்பு. அந்த நம்பிக்கை கீர்த்தியிடம் இருந்ததால் திருமணம் செய்து கொண்டேன்” என்றார்.