சல்மான் கான் நடித்து வெளியாகியுள்ள  கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தை பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். 


தமிழில் ஹிட்டடித்த “வீரம்” 


தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு  நடிகர் அஜித் நடிப்பில் வீரம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  சிவா இயக்கிய இப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார்.  அதுமட்டுமல்லாமல் பாலா, விதார்த், சந்தானம், நாசர், மயில்சாமி, தம்பி ராமையா, அப்புக்குட்டி, அபிநயா, வித்யுலேகா ராமன் என பலரும் நடித்தனர். வீரம் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதுதான் அஜித் - சிவா கூட்டணியில் வெளியான முதல் படமாகும்.  காமெடி, ஆக்‌ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த வீரம் படம் சூப்பர் ஹிட்டானது. 


தெலுங்கில் “ரீமேக்” 


இப்படம் தெலுங்கில் வீருடோக்கடே என்ற பெயரிலும், இந்தியில் வீரம் தி பெர்மன் என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகியிருந்தது. ஆனால் வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்னும் பெயரில் ரீமேக் ஆகி சூப்பர் ஹிட்டானது. 


கிஸி கி பாய், கிஸி கி ஜான் 


இப்படியான நிலையில் வீரம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ஹீரோவாக சல்மான் கான் நடித்த நிலையில், ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் சித்தார்த் நிகம், க்ரீத்தி சனோன், ஜெகபதி பாபு, மாளவிகா ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில் நேற்று இந்த படம் வெளியானது. இந்த படத்துக்கு ரவி பஸ்ரூர் , ஹிமேஷ் ரேஷ்மியா , தேவி ஸ்ரீ பிரசாத் , பாயல் தேவ் , அமல் மல்லிக் என 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றிருந்தனர். 


அதேசமயம் நடிகர் ராம் சரண் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியான கிஸி கி பாய், கிஸி கி ஜான் படம் ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். 


ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்


இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்  கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தை கழுவி ஊற்றியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அஜித் நடிச்ச வீரம் படம் சூப்பர் படம் இல்லை என்றாலும் நல்ல படம் தான். ஆனால் கிஸி கி பாய், கிஸி கி ஜான் படத்தை உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்த்தோம்” என தெரிவித்துள்ளார். 


மேலும், “படம் தான் இப்படி என்றால் பாட்டு அதை விட மோசம். ஒவ்வொரு ப்ரேம்லயும் குரூப் டான்ஸ் மாதிரி 1000 பேர் ஆடிட்டு இருக்காங்க. இதேபோல் மெட்ரோ ரயில் சண்டை ஒன்னு இருக்கு. அதுல மெட்ரோ ரயிலையே ஸ்தம்பிக்க வச்சிட்டங்க. படத்துல வில்லன் ஜெகபதி பாபு தான் என்றாலும், அவருக்கு மேலே ஒரு வில்லன் இருக்காரு. இது வீரம் ரீமேக்கா இல்லை, வீரம் படத்தை கிண்டல் செய்து எடுக்கப்பட்டதா என தெரியல” என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.