காந்தாரா 


கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  இது கன்னட திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ள காந்தாரா திரைப்படம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. 


இதன் காரணமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம்  நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக படத்தில் இடம்பெற்ற தெய்வ நர்த்தகர் கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.  இந்திய திரையுலகமே பாராட்டிய நிலையில் காந்தாரா படம் நேற்று வசூலில் ரூ.400 கோடியை கடந்தது. 


2022ம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாகும். உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்த படத்தின் திரைக்கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பு. காந்தாரா படத்தின்  ஆஸ்கர் 2023க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


காந்தாரா 2 எப்போது?


காந்தாரா முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதனின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். "படத்திற்கான திரைக்கதை எழுதுவதற்காக கர்நாடகா கடற்கரை பகுதிக்கு தனது உதவியாளர்களுடன் ரிஷப் ஷெட்டி சென்றுள்ளார். முதல் பாகத்தை விடவும் கூடுதல் செலவில் படத்தை தயாரிக்க உள்ளோம். ஜூன் மாதம் ’காந்தாரா இரண்டாம்’ பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. 2024-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை  வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.


காந்தாரா இரண்டாம் பாகம்மானது ’காந்தாரா’ முதல் பாகத்தின் முந்தைய கதையைச் சொல்லக் கூடிய படமாக எடுக்கப்பட உள்ளதாம். ’காந்தாரா’ படத்தில் இடம் பெற்றுள்ள காவல் தெய்வம், காவல் தெய்வத்தின் கற்சிலையைக் கொண்டு சென்ற மலைநாட்டு மன்னன், வழிபாடு ஆகியவை காந்தாரா 2 படத்தின் கதையாக எழுதப்படுகிறது. ஆனால் படத்தின் தொடர்ச்சியையும் உண்மைத்தன்மையையும் தக்கவைக்க திரைப்பட நடை, கதை மற்றும் ஒளிப்பதிவு காந்தாராவின் முதல் பாகத்தை போலவே இருக்கும். இந்தியா முழுவதும் 'காந்தாரா 2' படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்தாரா முதல் பாகத்தை விட இதில் அதிகமான கதாபாத்திரங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 




மேலும் படிக்க


Gangai Amaran On SPB : எஸ்பிபி மூச்சுவிடாம பாடல.. அந்த பாட்டு ஒரு ஏமாத்து வேலை.. கங்கை அமரன் பேச்சால் பரபரப்பு