தனியாக வசிக்கும் உறவினர்களால் கூட ஒருவரை மனதளவில் புண்படுத்த முடியும் என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கருத்து தெரிவித்துள்ளது. 


தன்னை தனது உறவினர் மனதளவில் புண்படுத்திவிட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்திய தண்டனை சட்டம் 498-A, 323, 524 ஆகிய பிரிவுகளின் கீழும் குடும்ப வன்முறைச் சட்டம் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் 498-A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்ட உறவினர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை நீதிபதிகள் சுனில் பி சுக்ரா, சி.டபிள்யூ. சந்த்வானி ஆகியோர் விசாரணைக்கு எடுத்து கொண்டனர். அப்போது, தனியாக வசிக்கும் உறவினர்களால் கூட சக உறவினரை மனதளவில் புண்படுத்த முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி. மகாஜன், "வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பதாரர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள்,


அதாவது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கணவன் மற்றும் மனைவி ஆகியோருடன் அவர்கள் வசித்ததற்கு ஆதாரங்ரகள் இல்லை.  அதேபோல, விண்ணப்பதாரர்கள் யாரும் உறவினர்கள் என்ற வரம்பின் கீழ் வர மாட்டார்கள்.


எனவே, இந்திய தண்டனை சட்டம் 498-A பிரிவின் கீழ் வரும் புண்படுத்துதல் குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மீது சுமத்த முடியாது" என்றார்.


இதற்கு பதில் வாதம் வைத்த பாதிக்கப்பட்டவர் சார்பு வழக்கறிஞர் எஸ்.எம். கோதேஷ்வர், "சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்வது அவசியம். 


விண்ணப்பதாரர்கள் அனைவரின் மீதும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட பிரிவின் கீழ் அவர்கள் புண்படுத்தியதற்கு முகாந்திரம் உள்ளது" என கூறினார்.


இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், "உறவினர்கள் வேறு இடத்தில் இருந்தாலும் ஒருவரைக் கொடுமைப்படுத்தி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.


 






ஒரே வீட்டில் இல்லாவிட்டாலும், தொலைபேசி, இதர தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்பு கொண்டுகூட ஒருவரை துன்புறுத்த முடியும். அப்படிப்பட்ட உறவினர்கள் மீது வழக்கு பதியலாம்" என தெரிவித்தது.


மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.