மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்களில் ஒன்றான “மண்ணில் இந்த காதலின்றி” பாடல் பற்றி இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்த தகவல்கள் எஸ்.பி.பி. ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 1969 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை கிட்டதட்ட 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 16 இந்திய மொழிகளில் பாடியுள்ள எஸ்பிபியின் குரல் வழியாக வெளிப்பட்ட உணர்ச்சிகள் பாலின பேதம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக அமைந்தது.
திரையுலகில் கே.வி.மகாதேவன். எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசை மேதைகளால் பட்டை தீட்டப்பட்டு இளையராஜா காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தார். எஸ்.பி.பி இல்லாத படங்களே இல்லை என்னும் அளவுக்கு தனது கடைசி காலம் வரை பாடினார். எந்தன் தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் என அவர் பாடிய பாடல்களில் ஒரு வரி வரும். அதற்கேற்றாற்போல் எஸ்.பி.பி இன்று நம் அனைவரின் மனதில் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். அவரின் மரணம் இன்றும் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
எஸ்.பி.பி.யின் மறக்க முடியாத பாடல்
எண்ணற்ற பாடல்கள் எஸ்.பி.பி. பாடியிருந்தாலும், அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வெளிக்கொண்டு வந்தார். அதன்படி மனதில் உறுதி வேண்டும் படத்தில் டாக்டர் வேடத்தில் சினிமாவில் அறிமுகமான அவர், வசந்த் இயக்கிய கேளடி கண்மணி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். குண்டான உடல் அமைப்பு, வயது தாண்டிய நிலையில் ஹீரோவாக அறிமுகம் என இப்படம் எஸ்.பி.பி மீதான தவறான எண்ணங்களை உடைத்து மக்களை கொண்டாட வைத்தது.
இந்த படத்தில் ராதிகா ஹீரோயினாக நடித்த நிலையில், இருவருக்குமிடையே “மண்ணில் இந்த காதலின்றி” பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலை மூச்சு விடாமல் இதைப் பாட வேண்டும் என வசந்த் சொன்னதை மறுபேச்சு பேசாமல் பாடி கொடுத்துள்ளார். இப்போதும் இப்பாடலை மூச்சு விடாமல் எஸ்.பி.பி. எப்படி பாடினார் என யோசிக்காதவர்களே இல்லை. அப்படிப்பட்ட பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜார். இந்த பாடலுக்கு இசையமைக்க அவர் அதிக கவனம் எடுத்துக் கொண்டார்.
அது உண்மையில்லை
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், இந்த பாடலை பாடிக்காட்டினார். தொடர்ந்து இந்த பாட்டை பார்த்ததும் அண்ணன் (இளையராஜா) என்னிடம், ரெக்கார்ட் பண்ணிக்கோ என சொல்லிவிட்டு சென்றார். அதன் பின்னர் நானும் பாலுவும் (எஸ்பிபி) எந்த வரிகள் வரைக்கும் பாடணும். எந்த வரிகள் லீட் எடுத்து பாடணும் என முடிவு பண்ணி ஒட்டி ஒட்டி சேர்த்தது தான் மூச்சு விடாம பாடுன அந்த பாட்டு. அது ஒரு ஏமாற்றுவேலை என தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட எஸ்.பி.பி. ரசிகர்கள் கங்கை அமரனை கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர் பாடியது ஏமாற்று வேலை என்றால் மேடைகளில் பல ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் மூச்சு விடாமல் பாடியது எப்படி என கேள்வியெழுப்பியுள்ளனர்.