மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பாலிவுட் திரைப்படமான பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசரில் இந்து மத கடவுள்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து நரோட்டம் மிஸ்ரா குறிப்பிடுகையில், நான் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரைலரை பார்த்தேன். அதில் சில ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஹனுமன் தோலால் ஆன உடைகள் அணிந்திருப்பது போல் காட்டப்பட்டிருக்கிறது. அந்த மாதிரியான காட்சிகள் இந்து மத நம்பிக்கைகளுக்கு இழுக்கு ஏற்படுத்துகின்றன. நான் இது குறித்து படத்தின் இயக்குநர் ஓம் ராவத்திற்கு அந்த காட்சிகளை நீக்குமாறு கடிதம் எழுதியுள்ளேன். அவர் நீக்கவில்லையெனில் சட்டபூர்வமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சரும் உள்துறை அமைச்சருமான நரோட்டம் மிஸ்ரா ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாகுபலிக்கு பிறகு வெளியான ‘சாஹோ’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தப்படத்தின் வாயிலாக வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் பிரபாஸ்.
ஆதிபுருஷ்’ திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. நடிகை க்ருத்தி சானோன், சீதையின் வேடத்தில் நடிக்கிறார்.
இதனால் 'ஆதி புருஷ்' படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் படத்தில் இருந்து புதிய அப்டேட்டாக இந்தப்படத்தின் டீசர் அக்டோபர் 2 வெளியானது.டீசர் வெளியானதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.