தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவியத் தொடங்கினர்.




இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா, மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான். ஆண்டு தோறும் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழா இந்தாண்டு செப்டம்பர் 26-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர்.




தசரா திருவிழாவில் காப்பு அணிந்த பக்தர்கள் ராஜா வேடம் , காளி வேடம்,  அம்மன் வேடம், ஆஞ்சநேயர் வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று அதனை மகிஷாசூரசம்காரம் நடைபெறக்கூடிய பத்தாம் திருநாளில் கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.




மேலும், மாலை அணிந்த பக்தர்கள் அவர்களது ஊரில் தசரா குடில் அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவேளை மதியம் மட்டுமே பச்சரிசி சாதம் உணவு சாப்பிடுவார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் தசரா குடில் அமைத்து கலை நிகழ்ச்சிகளை வீதி தோறும் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர்.




விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் சிம்மம், கற்பகவிருட்சம், ரிஷபம், மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில், துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசுரமர்த்தினி உள்ளிட்ட திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் கோயில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.




8-ம் நாளான நேற்று இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 9-ம் நாளான இன்று அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர  சூரசம்ஹாரம் நள்ளிரவு நடைபெறுகிறது.  இதையொட்டி நாளை இரவு 12 மணிக்கு மகிஷாசுரமர்த்தினி அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன்பாக ஏழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்வார். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 




அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். இதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெ றும்.


கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் பக்தர்கள் சூழ நடைபெற உள்ளதால் குலசையில் லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதியுடன் தசரா திருவிழா நடைபெறுவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பேருந்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது