நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி திடீரென திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் - அட்லீ கூட்டணியில் பிகில் படம் வெளியானது. இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தாலும் படமானது மகளிர் கால்பந்து அணியை பற்றிய கதை என்பதால் இந்துஜா ரவிச்சந்திரன், அம்ரிதா அய்யர், ரெபோ மோனிகா ஜான், இந்திரஜா ஷங்கர், வர்ஷா பொல்லம்மா, காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல வளரும் இளம் நடிகைகள் நடித்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரின் கேரக்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் காயத்ரி ரெட்டி பிகிலை தொடர்ந்து நவீன், அம்ரிதா நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் கேமியோ ரோலி நடித்திருந்தார். மேலும் நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் எவ்வளவு வலிமையானவர் என்பதை அவர் நிரூபித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கு நிச்சயம் நடந்த தகவலை தெரிவித்திருந்தார். எளிமையான முறையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் கல்யாணம் வெகுவிமரிசையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு திருமணமாகி விட்டதாக கூறி கல்யாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் காயத்ரி ரெட்டி பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் காயத்ரி ரெட்டிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.