பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த 18 போட்டியாளர்களில் 14ஆவது போட்டியாளராக நுழைந்தவர் நடிகர் மற்றும் பாடகர் யுகேந்திரன் வாசுதேவன். 


மறைந்த பழம்பெரும் பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் என்று அடையாளப்படுத்தப்பட்ட யுகேந்திரன் மிகவும் திறமையானவர். ஏராளமான பாடல்களை யுகேந்திரன் பாடி இருந்தாலும் தோழா தோழா... கனவு தோழா, கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, முதல் முதலாய், பார்த்தேன் ரசித்தேன், கிழக்கே பார்த்தேன் போன்ற பல பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்தன. 


 



ஒரு பாடகராக மட்டுமன்றி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் அஜித் மற்றும் ஜோதிகாவின் நண்பனாக பூவெல்லாம் உன் வாசம், மிஷ்கினின் யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இளையராஜா, பரத்வாஜ், ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா என பலரின் இசையில் பாடியுள்ளார்.


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக யுகேந்திரன் பங்கேற்க ஒரே காரணம் அவர் தன்னுடைய தந்தையின் நிழலில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதே. அந்த வகையில் கடந்த நான்கு வாரங்களாக சிறப்பாக விளையாடிய யுகேந்திரன் பிக்பாஸ் 7ஆவது சீசனின் இரண்டாவது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். 


மிகவும் டீசன்ட் கேம் விளையாடிய யுகேந்திரன் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கும் மிகவும் பேவரட்டாக இருந்தார். கடந்த ஞாயிற்றுகிழமை அன்று டபிள் எவிக்ஷனாக யுகேந்திரன் மற்றும் வினுஷா இருவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் புதிதாக தினேஷ், ஆர்.ஜே. ப்ராவோ, சின்னத்திரை நடிகை அர்ச்சனா, கானா பாலா, அன்னபாரது ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்துள்ளனர். 


இந்நிலையில், குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவரான யுகேந்திரன் தன்னுடைய பேமிலியை பிக்பாஸ்  வீட்டில் ரொம்பவே மிஸ் செய்தார். அதை பல முறை பிக்பாஸ் வீட்டில் வெளிப்படுத்தவும் செய்தார். இந்த வாரம் அவர் வெளியேற்றப்படக் கூடும் என கணித்து வைத்திருந்தார். மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் இன்வால்வ்மென்ட் குறைவாக இருப்பதை அவரே ஏற்றுக்கொண்டார். இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருந்த நான்கு வாரமும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினார் யுகேந்திரன். 


 


 



பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மிகவும் பாசிட்டிவாக "முடிந்த வரையில் முயற்சி செய்வோம் முடிவுகளை ஏற்றுக்கொள்வோம்!" என ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். உண்மையிலேயே அவரின் முயற்சி பாராட்டிற்குரியது. 


அதைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன் மூன்று மகன்களுடன் தான் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் போன் இல்லாமல் இருந்த யுகேந்திரன், தன்னுடைய வீட்டுக்குச் சென்றதும் போனுக்கு வந்த மெசேஜ் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார். நேச்சுரலாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.