ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி பிக் பாஸ் தீவிர ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


 



அந்த வகையில் இந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவராக நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஷங்கர் என்ட்ரி கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அட்லீயின் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படமான 'பிகில்' படத்தில் நடித்து கவனமீர்த்த இந்திரஜா ஷங்கர், திரைப்படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த டான்ஸரும் கூட. சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக  இருக்கும் இந்திரஜா அவ்வப்போது ரீல்ஸ் போஸ்ட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 


திருமணத்துக்கு முன் பிக்பாஸ்


சமீபத்தில் தான் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் கார்த்திக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலம். ஏராளமான ரசிகர்கள் இந்த  ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.


விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் இந்திரஜா என எதிர்பார்த்தால், அம்மணி பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் தகவல் தான் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் ஒரு கை பார்த்து விடலாம் என ரெடியாகிவிட்டார் இந்திரஜா. 


 



இந்திரஜா ஷங்கருக்கு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது ஒன்றும் புதிதான ஒரு விஷயமல்ல. அவரை ஏற்கெனவே கடுமையான ஒரு போட்டியாளராக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் பார்த்து ரசித்துள்ளனர் ரசிகர்கள். அதனால் இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியும் அவருக்கு ஒரு சவாலாக அமையும் என்பது உறுதி. இந்திரஜா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவரின் மாமா கார்த்திக் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பது, அவர்களுக்குள் நடக்கும் ரொமான்ஸ் எல்லாம் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிறவைக்கும் என யூகிக்கப்பட்டது. இப்படி ரசிகர்கள் கற்பனைகளை தெறிக்கவிட்டு வந்த நிலையில் தற்போது அதை குழப்பும் விதமாக வேறு ஒரு செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. 


திருமண அழைப்பிதழ் தந்த குழப்பம் :


ரோபோ ஷங்கரின் குடும்பம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இந்திராஜாவின் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர் என்ற தகவல் புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இதனால் இந்திரஜா உண்மையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க போகிறாரா அல்லது திருமணம் செய்து கொள்ள போகிறாரா? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


மாகாப ஆனந்த், வனிதா மகள்


இந்த பிக் பஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்களாக விஜய் டிவியின் பிரபலமான மற்றும் அனைவரின்  ஃபேவரட் தொகுப்பாளரான  மாகபா ஆனந்த், நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா விஜயகுமார், 90'ஸ் சாக்லேட் பாய் அப்பாஸ், சமீபத்தில் ட்ரெண்டிங்காக இருந்த கோவையை சேர்ந்த பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா, சின்னத்திரை நடிகைகள் ரவீனா தாஹா, தர்ஷா குப்தா, சர்ச்சைகளின் ராணி ரேகா நாயர் , செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், வி ஜே ஜாக்குலின், நடிகர் பப்லு பிரித்விராஜ், உமா ரியாஸ் மற்றும் பலர் இந்த சீசனில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வேற லெவல் கலகலப்புடன் நகர்த்த உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.