சமீப காலமாக ரியாலிட்டி ஷோக்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதலாம் சீசன் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. மற்ற மொழிகளில் ஏற்கனவே பல சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி 2017ம் ஆண்டு முதல் தான் பரிச்சயமானது.
முதல்முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 18 போட்டியாளர்கள் ஒரே வீட்டுக்குள் கேமராக்கள் சூழ வெளி உலகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இன்றி 100 நாட்கள் பயணிக்க வேண்டும் என்ற சவாலுடன் உள்ளே நுழைகிறார்கள். பல டாஸ்குகளை கடந்து வாராவாரம் ஒருவர் வாக்குகளின் எண்ணிக்கையின் படி வீட்டிலிருந்து வெளியேற்ற படுவார்கள்.
கடைசியாக பைனல் மேடையில் அதிக வாக்குகளை பெற்ற போட்டியாளர் பிக் பாஸ் டைட்டில் மற்றும் ட்ராபியுடன் சேர்த்து 50 லட்சம் பணத்தையும் வெல்வார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது 7வது சீசன் துவங்க உள்ளது.
கடந்த 6 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்த விவரங்களை சீசன் வாரியாக இங்கே பார்க்கலாம் :
பிக் பாஸ் சீசன் 1 :
2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி துவங்கிய முதல் சீசன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ஸ்ரீ, அனுயா பகவத், வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா வில்சன், ஸ்னேகன், ஓவியா, ஆர்த்தி, ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலியானா, கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசுதேவன் மற்றும் நமிதா முதல் நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் மற்றும் காஜல் பசுபதி வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர்.
ஆரவ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்ல, இரண்டாவது இடத்தை கவிஞர் ஸ்னேகனும் கைப்பற்றினர்.
பிக் பாஸ் சீசன் 2 :
2018ம் ஆண்டு ஜூன் 17 முதல் செப்டம்பர் 30 முதல் ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, விஜயலக்ஷ்மி, ஜனனி, யாஷிகா ஆனந்த், தாடி பாலாஜி, மும்தாஜ், சென்றாயன், டேனியல், மஹத், வைஷ்ணவி, பொன்னம்பலம், ஷாரிக், என்.எஸ்.கே.ரம்யா,நித்யா, ஆனந்த், மமதி சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னராக ரித்விகாவும் இரண்டாவது இடத்தை ஐஸ்வர்யா தத்தாவும் கைப்பற்றினர்.
பிக் பாஸ் சீசன் 3 :
2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களாக அபிராமி, சேரன், பாத்திமா பாபு, ஜாங்கிரி மதுமிதா, கவின், லோஸ்லியா மரியனேசன், மோகன் வைத்யா, முகன் ராவ், ரேஷ்மா பசுபுலேதி, சாக்ஷி அகர்வால், சாண்டி, சரவணன், ஷெரின், தர்ஷன் மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முதல் நாளில் என்ட்ரி கொடுக்க மீரா மிதுன், கஸ்தூரி ஷங்கர் இருவரும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர்.
வனிதா விஜயகுமார் 21வது நாள் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து 84 நாட்கள் வரை தாக்குப் பிடித்து பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னராக முகன் பட்டத்தை வெல்ல இரண்டாவது இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினார்.
பிக் பாஸ் சீசன் 4 :
இந்த சீசன் சற்று தாமதமாக 2020ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் ஜனவரி 17 , 2021 வரை ஒளிபரப்பானது. இந்த சீசன் போட்டியாளர்களாக ரியோ, சனம், ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா, ஷிவானி, ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம்சேகர், கேப்ரியல்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா, சம்யுக்தா, சுரேஷ், ஆஜித், சுசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சீசன் வெற்றியாளராக ஆரி டைட்டிலை கைப்பற்ற பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தை பெற்றார்.
பிக் பாஸ் சீசன் 5 :
2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி துவங்கிய 5வது சீசன் ஜனவரி 16, 2022 வரை ஒளிபரப்பானது. இந்த சீசன் போட்டியாளர்களாக ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப், தாமரை, சிபி, சஞ்சீவ், வருண், அக்ஷரா, அபிநய், அபஷேக், ஐக்கி பெர்ரி, இசைவாணி, மதுமிதா, சின்னப்பொண்ணு, நதியா,நமீதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சீசன் வெற்றியாளராக ராஜு தேர்ந்து எடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பிரியங்கா கைப்பற்றினார்.
பிக் பாஸ் அல்டிமேட் :
முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கிய இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 10ம் தேதி வரை ஒளிபரப்பானது. மூன்று வாரங்கள் வரை உலகநாயகன் தொகுத்து வழங்க நான்காவது வாரம் முதல் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கடந்த ஐந்து சீன்களாக அதகளம் செய்த போட்டியாளர்களில் இருந்து ஒரு சிலரை தேர்ந்து எடுத்து இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் களம் இறக்கினார்கள். இதில் ஜூலி, வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், சினேகன், அபிராமி, தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஷாருக், அபிநய், பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, தாமரை, நிரூப், சுஜா வருணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளராக பாலாஜி முருகதாஸ் டைட்டில் ஜெயிக்க நிரூப் இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.
பிக் பாஸ் சீசன் 6 :
2022ம் அக்டோபர் மாதம் 9ம் துவங்கிய ஆறாவது சீசன் ஜனவரி 22, 2023 வரை ஒளிபரப்பானது. இந்த சீசன் போட்டியாளர்களாக முத்து, அசல், ஷிவின், அசீம், ராபர்ட், ஆயிஷா, ஷெரீன், மணிகண்டன், ரச்சிதா, ராம், அசல், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி, கதிரவன், ஏ.டி.கே, தனலட்சுமி, குயின்சி, நிவாஷினி , மகேஸ்வரி, சாந்தி, முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சீசன் டைட்டில் வின்னராக அசீம் வெற்றிபெற இரண்டாவது இடத்தை விக்ரமன் வென்றார்.
கடந்த ஆறு சீசன்களாக வெற்றிநடை போட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிக் பாஸ் 7 கோலாலகமாக துவங்க உள்ளது.