கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை, முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வைல்டு கார்டு உள்பட மொத்தமாக 24 போட்டியாளர்கள் இதில் பெற்றனர். அதிகபட்சமாக இந்த சீசனில் தான் அதிக போட்டியாளர்கள் இடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண்கள் – பெண்கள் என்று போட்டியாளர்கள் பிரிவிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது. ஆனால், இதில் சுவாரஸ்யம் இல்லை என்ற நிலையில் பிக் பாஸ் ஆண்கள் – பெண்கள் போட்டியை நீக்கினார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் மலர்ந்து, பிக்பாஸ் நிகச்சியும் விறுவிறுப்படைந்தது.

பிக்பாஸ் ஃபின்னாலே... TRPயில் கமல் ஹாசனையே ஓரம் கட்டிய விஜய் சேதுபதி!


பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கிய போது, போட்டியாளர்களை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்த பிக்பாஸ் குழு வாரந்தோறும் ஒன்றல்ல 2 போட்டியார்களை ஓட்டிங் மூலம் வெளியேற்றியது. இறுதிப் போட்டிக்கு ரயான், விஜே விஷால், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் ஆகிய 5 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இதில், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மூலமாக நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்ற ரயான் இறுதிப் போட்டி நாளன்று முதலாவதாக வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து பவித்ரா வெளியேற்றப்பட்டார்.


இதைத் தொடர்ந்து மற்ற 3 போட்டியாளர்களும் இறுதிப் போட்டியின் மேடைக்கு வந்தனர். அவர்களில் விஷால் கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இறுதியாக முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகை மற்றும் பிக் பாஸ் டிராப்பியும் வழங்கப்பட்டது. அதன் பிறகு வெளியில் வந்த முத்துக் குமரன் தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.


புதிதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விஜய் சேதுபதி, எப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அவர் மீது விமர்சனங்கள்  எழுந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் போட்டிக்கு ஐடியா கொடுக்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். அதோடு வரக் கூடிய சீசனுக்கு எப்படி போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து பற்றியும் பிக் பாஸ் குழுவினருக்கு தனது ஆலோசனைகளை கொடுத்திருக்கிறாராம்.




இப்படி தன்னை இந்த நிகழ்ச்சியில் ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.15  கோடி என கூறப்படுகிறது. அடுத்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படும் நிலையில் சம்பளம் இரண்டு மடங்கு ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 


இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ஃபைனல் TRP ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதிப் போட்டியை 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். அதோடு, 1.6 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் வரையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதிப் போட்டி பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளியில் (டிஆர்பி ரேட்டிங்) இந்த நிகழ்ச்சி 10.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இது கடந்த சீசனில் 9.9 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.