பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் பெண் கேப்டனாக பூர்ணிமா ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் பிரச்சினை வெடித்துள்ளது. 


மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா என 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 


இந்த போட்டியை வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் வார எவிக்‌ஷனாக அனன்யா ராவ் வெளியேறினார். தொடர்ந்து உடல் நலக்குறைவால் தானாக முன்வந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை வெளியே வந்தார். இதனால் இரண்டாவது வாரத்தில் எவிக்‌ஷன் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மாயா,அக்‌ஷயா, வினுஷா, நிக்ஸன், விஜய், பிரதீப், விசித்ரா, சரவண விக்ரம், ஐஷூ, மணி சந்திரா மற்றும் பூர்ணிமா என 11 பேர் இடம் பெற்றனர். 


இதிலிருந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எபிசோடு இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இப்படியான நிலையில் அடுத்த வாரத்துக்கான கேப்டனாக பூர்ணிமா ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சேர்ந்து கேப்டன் தேர்வுக்காக நிக்ஸன்,பூர்ணிமா, விஜய் ஆகிய 3 பேரை தேர்வு செய்தனர். இவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 


கடந்த வார கேப்டன் யுகேந்திரன் மற்றும் நிக்ஸன்,பூர்ணிமா, விஜய் ஆகிய 3 பேரை தவிர்த்து 0 முதல் 9 எண்கள் கொண்ட போர்டுடன் மற்ற போட்டியாளர்கள் நிற்க வேண்டும். அங்கிருந்த ஒரு ஸ்க்ராட்ச் கார்டில் இருக்கும் 4 எண்கள் மட்டும் வந்து நிற்க வேண்டும். அதன்படி சரவண விக்ரம், மாயா, ரவீனா, அக்‌ஷயா ஆகிய 4 பேர் வைத்திருந்த எண்கள் வந்தது. இவர்கள் 4 பேரை கேப்டன் தேர்வில் இருக்கும் 3 பேர் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கோர வேண்டும். பெரும்பான்மை அடிப்படையில் கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என பிக்பாஸ் அறிவித்தார். 


அதன்படி ரவீனா மட்டும் நிக்ஸனுக்கு சப்போர்ட் செய்ய, மற்ற 3 பேரும் பூர்ணிமாவை ஆதரித்தனர். இதில் இந்த 4 பேரிடம் பேசிய பூர்ணிமா, நான் கேப்டனால் உங்களுக்கு எண்டெர்டெயின்மெண்ட் கியாரண்டி என வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில் அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். நடப்பு சீசனில் முதல் பெண் கேப்டனாகவும் பூர்ணிமா சிறப்பை பெற்றார். ஆனால் அவரின் தேர்வு சரியில்லை என கூறி நிக்ஸன் பிரச்சினை செய்தார். 


எப்படி கேப்டன் தேர்வில் ஆண், பெண் பாலினம் பார்த்து தேர்வு செய்வீர்கள்.ஜாலியாக இருப்பவர்களா கேப்டனாக வேண்டும்?. யார் பவரை சரியாக உபயோகிப்பார்கள் என்பதை வைத்து தானே தேர்வு செய்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க மாயாவின் மூளைச்சலவையால் தான் நடைபெற்றது என கூறி விசித்ரா, சரவண விக்ரம் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்தார். இந்நிலையில் நிக்ஸன் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 


வாய்ப்பு என்பது அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அப்போது தான் ஒருவர் எந்தளவுக்கு திறமை உள்ளவர் என்பது தெரிய வரும். ஆனால் கேப்டன் தேர்வு குழுவில் இடம் பெற்றிருந்த சரவண விக்ரம், “முதல்முறையா பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்” என்ற அடிப்படையிலேயே தான் தேர்வு செய்ததாக குறிப்பிட்டது மிக சரியான விஷயம். இதை எப்படி நிக்ஸனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.