பிக்பாஸ் சீசன் 7
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 65 நாள்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர். நீண்ட நாள் ஆசைக்குப் பிறகு ஒரு வழியாக இந்த வாரம் விஷ்ணு கேப்டனாகியுள்ள நிலையில், தன் முன்கோபத்தைக் கட்டுப்படுத்தி விஷ்ணு கேப்டன்சி செய்வாரா என சக போட்டியாளர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
நோ எவிக்ஷன்:
அதே போல, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிக்சன், அர்ச்சணா, விசித்ரா, மணி, தினேஷ் ஆகியோர் உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிக்ஜாம் புயல் காரணமாக இந்த பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து 5 பேருக்கு எஸ்கேப் ஆகியுள்ளனர். இந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.
புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்:
மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து இருக்கிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
இதனால் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு பக்கமிருக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் 16 இடங்களில் இதுவரை 950 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.