பிக் பாஸ் சீசன்-6


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.


நடிகர் ஜிபி முத்து, தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் பிக் பாஸ் இல்லத்திலிருந்து சிறிது நாட்களுக்கு முன்பு தானாக முன்வந்து வெளியேறினார். சென்ற வாரம், நடிகை சாந்தி பிக்பாஸ் இல்லத்திலிருந்து ’எவிக்ட்’ செய்யப்பட்டார். 


பிக் பாஸ் ஹவுசில் போட்டியாளர்களுக்கிடையே சண்டையும் சச்சரவும் வருவது வழக்கம். ஆனால் இந்த சீசனில் சண்டையையும் தாண்டி, ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையான செயல்களில் ஒரு சில போட்டியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் போட்டியாளர் அஸிம் மிக முக்கியமானவர். முதல் வாரம் நடந்த சண்டையில் ஆயிஷாவை வாடி போடி என ஏகத்துக்கும் பேசி கமல்ஹாசனிடம் வாங்கி கட்டிக் கொண்டார். ஆனாலும் அவர் திருந்தவேயில்லை. 


இந்த வாரம் நடந்த சண்டையில் தனலட்சுமி, ரச்சிதா, அமுதவாணன், ஷிவின் என அனைவரிடமும் சண்டைக்கு சென்றார். இதில் ஒரு சண்டையின் போது, சக போட்டியாளரான ஷிவினைப் பார்த்து அவர் பாலினத்தை கேலி செய்யும் வகையில் சைகை செய்தார். அந்த செயல் குறித்து ஷிவின் அஸிமிடம் கேட்டபோது “நான் அப்படி ஒன்றும் செய்யவில்லையே” என சாதித்தார். பிக் பாஸ் இல்லம் முழுவதும் உள்ள கேமராக்கள், அசீம் செய்த செயலை கண்காணித்து உரிய நேரத்தில் உரியவர்களிடம் போட்டுக்கொடுத்துள்ளது. 




அசீமை கண்டித்த கமல்


வாரம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை அலசி ஆராய்ந்த பிறகு, பிக் பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களை நடிகர் கமல் ஹாசன் கண்டிப்பது வழக்கம். இந்த சம்பவத்தை நேற்றைய நிகழ்ச்சியின் போது கமல் ஹாசன் சுட்டிக்காட்டி அஸிமை கண்டித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்த பிரச்சனையை ஷிவின் எதிர் கொண்ட விதத்திற்காக அவரைப் பாராட்டுகிறேன்” எனக் கூறினார்.


இதற்கு  அரங்கமெங்கும் ஷிவினிற்கு கரகோஷம் எழ, மீண்டும் அஸிமிடம் திரும்பிய கமல், “ஷிவினை கேலி செய்ததற்கு நீங்கள் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை” என கூறினார். இதைத்தொடர்ந்து, அஸிமும் ஷிவினிடம் “சாரி” கேட்டார். தொடர்ந்து பேசிய கமல், “உங்களை முன் உதாரணப்படுத்திக் காட்டுவது, உங்களைப் போல பல பேர் இப்படி வெளியில் உள்ளனர். அவர்களுக்கு ஷிவின் சார்பாக நான் அனுப்பும் செய்தி இது. யார் என்ன கிண்டல் செய்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என முடிவு எடுத்த பெண் இவர். அவரை அப்படித்தான் சொல்ல வேண்டும். நான் இருக்கிற மாதிரி ஷிவினைப்போல வெளியில் இருக்கும் சகோரிகளுக்கு ஒரு அண்ணன் இருப்பான்” என கமல் தன்னை கைக்காட்டி கூறினார். 


 








ரசிகர்கள் ஆதரவு:


நடிகர் கமல் ஹாசன் நேற்றைய எபிசோடில் தெறிக்கவிடும்படி அனைவருக்கும் சம்பவம் செய்துவிட்டதாக பல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல நாட்களாக பலருடனும் சண்டைப் போட்டு, பிக் பாஸ் இல்லத்தில் டாமினேட் செய்து வரும் அஸிமிற்கு இது தேவைதான் எனவும் சிலர் கமெண்டுகளில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.