தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர், மணிரத்னத்துடன் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்வுகள் என பிசியாக இருக்கும் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றார். 


அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில், பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தை சந்தித்திருந்தார். இதன் புகைப்படத்தை, அவர் தனது சமூக வலைத்தப்பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதற்கிடையில் சென்னை திரும்பிய அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.  இதையடுத்து கமல் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. 






இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் யார் தொகுத்து வழங்குவார் என்ற பெரும் கேள்வி எழுந்தது. இப்படியாக அனைவரும் சந்தேகத்தில் இருந்த போது, நேற்று விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். தற்போது, பிக்பாஸ் ப்ரோமோ வெளியானது. இதில் கமல் தொகுத்து வழங்கும் காட்சி இடம்பெற்று பலரின் கேள்விக்கு பதிலாக அமைந்துவிட்டது.


ட்ரெய்லர் வெளியீட்டில் பேசிய கமல் : 






சகோதரர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்தேன். படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். ரொம்ப நன்றாக உள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். முன்பெல்லாம் பெரிய விபத்து நடக்கும் பொழுது கூட அடுத்து எப்ப ஷூட்டிங் போறீங்க என என்னை பார்த்தால் கேட்பார்கள். இப்ப சாதாரண இருமல்தான். ஆனால் மிகப்பெரிய செய்திகள் எல்லாம் எனக்கு வருகிறது. இதற்கு காரணம் ஒன்று ஊடகம், இன்னொன்று பெருகி இருக்கும் அன்பு, என்று நான் நம்புகிறேன் என கமல் தெரிவித்துள்ளார்.