பிக்பாஸ்-5 வின்னராக அண்மையில் ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ராஜூவை அழைத்து கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்ற இமான் அண்ணாச்சி. மேலும் அது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர்,
வீட்டு பூந்தோட்டத்தில்
முளைத்த செடியிலிருந்து
கொடியின் பூக்கள் வரை
ஒன்றில் இரு வண்ணம்
அண்ணனும் தம்பியும் போல..!
அண்ணனுடன் பிறந்த
தம்பிகளுக்கு மட்டும் தான்
தெரியும் அண்ணனுக்கு
இன்னொரு பெயர்
அப்பா என்று..!
என கவிதையும் எழுதியுள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர். பிக்பாஸ் ஃபைனலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முன்னதாக இறுதி நிகழ்ச்சிக்கு முதல் நாள் அனைத்து போட்டியாளர்களையும் அழைத்து அவர்கள் பிக்பாஸ் வீட்டில் வாழ்ந்து முடித்த AV குறும்படங்களை பிக்பாஸ் ஒளிபரப்பினார். அப்படி ராஜூவையும் அழைத்து பிக்பாஸ், அவருக்கான குறும்படத்தை ஒளிபரப்பு செய்தார். ராஜுவிடம் பேசிய பிக்பாஸ், “ராஜூ உங்களை உலகுக்கு தெரியப்படுத்துவதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தீர்கள். குறைவாக பேசி நிறைய உள்ளங்களை கவர்ந்தீர்கள். நாளடைவில் நகைச்சுவையின் நாயகனாக கவர்ந்தீர்கள். பல நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்தி, சில நேரங்களில் அதற்கு இரையாவீர்கள். பின்னர் தம்பிக்கு அண்ணனாக, அண்ணனுக்கு தம்பியாக, இந்த வீட்டின் எண்டர்டெயினராக இருந்து வருகிறீகள். நல்ல பாடி, நல்ல பிரெய்ன் இருக்கும் ராஜூ பாய் நீங்கள்!” என்று குறிப்பிட்டார்.
அப்போது பேசிய ராஜூ, “சில வருடங்களுக்கு முன்னர் என்னோட வேலையே இதுதான். நான் பல ஸ்டார்ஸுக்கு AV கட் பண்ணியிருக்கிறேன். பல ஸ்டார்ஸ்க்கு நான் குட்டி குட்டி கன்டென்ட்டாக எடுத்து இப்படி AV கட் பண்ணுவேன். ஆனால் இன்று யாரோ எனக்கு இப்படி பண்ணியிருக்கிறார்கள்” என்றார் உருக்கமாக. அதன் பிறகு மறுநாள் நிகழ்வில் ராஜூ பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.