விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். வெளிநாடுகளில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலாக இந்தியில் ஒளிபரப்பாகியது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் பிக்பாஸ் அறிமுகமாகியது.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. 16வது சீசனுக்கான தொடக்கப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 16-ஐ தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர் சல்மான்கான் கேட்ட சம்பளம் பிக்பாஸ் குழுவினரை தலைசுற்றவைத்துள்ளது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சல்மான்கானுக்கு ரூபாய் 350 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 16வது சீசனை தொகுத்து வழங்க சல்மான்கான் ரூபாய் 1050 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.
சல்மான்கான் கேட்ட சம்பளம் என்பது இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதற்கான தொகை ஆகும். இந்தியில் இதுவரை ஒளிபரப்பான 15 சீசன்களில் 10க்கும் மேற்பட்ட சீசன்களை சல்மான்கான்தான் தொகுத்து வழங்கியுள்ளார்.
சல்மான்கான் வரும் வார இறுதிநாட்களில் மட்டும் பிக்பாஸ் ஷோவைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதும், அன்றைய நாள் டி.ஆர்.பி. ரேட்டிங் மிகவும் அசத்தலாக இருக்கும். இந்தியில் வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சி செல்வதற்கு சல்மான்கான் முக்கிய காரணமாக உள்ளார். அவரது செயல்பாடுகள், அவரது அதிரடி முடிவுகள் ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி இருப்பதால் அவருக்கு என்று தனி மவுசு பிக்பாஸ் சீசனில் உண்டு.
சல்மான்கான் தவிர வேறு பிரபலங்களிடம் சென்றால் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக செல்லுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், பிக்பாஸ் குழு 1000 கோடியை கொடுத்துவிடலாமா? அல்லது புது தொகுப்பாளரை தேடலாமா? என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ளது. சல்மான்கான் சம்பளமே ரூபாய் 1000 கோடி கேட்கிறார் என்றால் பிக்பாஸ் வருவாய் எந்தளவு இருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்