பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நமீதா, பொருட்களைச் சேதப்படுத்தியதாகவும், உணர்ச்சிவசப்பட்டு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியில் வந்ததாக வெளியான தகவலும், பிக்பாஸ் ரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவிலும் நமீதா மாரிமுத்து காணப்படவில்லை.
போட்டியாளர்கள் ‘மாஃபியா’ என்னும் விளையாட்டை விளையாடியது நேற்றைய எபிசோடில் காண்பிக்கப்பட்டது. அந்த விளையாட்டு முழுதாக காட்டப்படவில்லையென்றாலும், அந்த விளையாட்டில் தாமரை கிண்டலடித்ததால் நமீதாவுக்கு கோவம் வந்ததைக் காட்டினார்கள். ‘உன் மனசுக்கு நீ 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என தாமரைச்செல்வி சொன்னதை, ‘உன் பொழப்புக்கு 400 பிள்ளைகளைக் கூட வளப்ப’ என்று சொன்னதாக புரிந்துகொண்ட நமீதா, ‘அசிங்க அசிங்கமா பேசுவேன்’ என சூடானார்.
நேற்றைய எபிசோடில் எல்லோரும் தூங்கிய பிறகு, அதிகாலையில் எழுந்த நமீதா வெராண்டா புல்வெளியில் உட்கார்ந்திருப்பது போலவும், பின்பு எழுந்து போய் தாமரைச்செல்வியை மன்னித்துவிட்டதாகக் கூறியதையும் பார்த்த ரசிகர்கள் நிம்மதியில் இருந்தபோது, இப்போது அவர் தாமரை மீதிருந்த கோபத்தில் பொருட்களை சேதப்படுத்தியதாக வரும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முதல் ஐந்து நாட்களிலேயே பெரிய அளவிலான ரசிகர்களை சம்பாதித்த நமீதா ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸைக் குவித்து வருகிறார்கள்.
’கதை சொல்லட்டுமா?’ பகுதியில் நமீதா தன் கதையைச் சொன்னபோது, “உடலில் மாற்றம் ஏற்பட்டு கேலிக் கிண்டலுக்கு ஆளானது முதல், உடலில் விழும் அடிகள் தொடர்ச்சியான பழக்கமாகி மறுத்துப்போனது வரை, அவர் கோர்வையாய் பேசியவை எல்லோரையும் அசைத்து, அழவைத்தது. பயம், பாதுகாப்பின்மை, பாலியல் தொல்லைகள் என தான் கடந்து வந்த அனைத்தையும், நம் கண்முன்பு நிறுத்தினார் நமீதா. மனநல காப்பகத்தில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லிய நமீதா, காப்பகத்தில் தன்னுடன் இருந்தவர்களை மனநல பாதிப்படைந்தோர் என்கிறார். மெண்டல் அல்ல தெரியாமல் உதிர்த்த வார்த்தையைத் திருத்தி, அவர்களுக்கு மனதில் ஏதோ பிரச்சனை, அவ்வளவே” என்றார். அவ்வளவு நிதானமாக பேசிய நமீதா ஏன் இந்த வாய்ப்பை இழந்தார் என சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் குவிகின்றன.