தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் கூட்டமே இருந்தாலும் ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.



இன்று முதல் பிக்பாஸ் சீசன் 8:


இந்த நிலையில், நடப்பாண்டிற்கான பிக்பாஸ் தொடர் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில், 8வது சீசனாக பிக்பாஸ் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான அத்தனை சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், நடப்பு சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.


புதிய தொகுப்பாளரான விஜய் சேதுபதியின் வித்தியாசமான நிகழ்ச்சித் தொகுப்பில் இந்த பிக்பாஸ் சீசன் 8 எப்படி இருக்கப்போகிறது? என்பதே ரசிகர்கள் பலருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.


சூடுபிடிக்குமா ஆட்டம்?


போட்டியாளர்கள் யார்? யார்? என்பது இன்றைய நிகழ்ச்சியிலே அதிகாரப்பூர்வமாக தெரியவரும். ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ரஞ்சித், ஐஸ்வர்யா, தீபக், தர்ஷா குப்தா, சச்னா, சுனிதா. ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா, சௌந்ர்யா நஞ்சுண்டன், டி.எஸ்.கே. பால் டப்பா அனீஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் உள்ளே சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசன் ஏராளமான சர்ச்சைகளுடனும், குழப்பத்துடனும் அரங்கேறியது. ஏராளமான மோதல், சலசலப்புகள் இருந்ததும், பல குழப்பமான தீர்ப்புகளும் கடந்த சீசனில் பல ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இந்த சீசனை மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்த பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு புதுப்புது போட்டிகள், காரசார விவாதங்கள், டாஸ்க்குகளுடன் ஆட்டத்தை நகர்த்த பிக்பாஸ் முடிவு செய்துள்ளது.

அசத்துவாரா விஜய் சேதுபதி?


இந்த முறை போட்டியாளர்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது விஜய் சேதுபதியே ஆவார். அவர் நடிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அவர் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் இதுவரை பெரியளவில் அசத்தவில்லை. அவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரியளவு வெற்றியை பெறவில்லை.


இதனால், அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது. இந்த முறை வெற்றி பெற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றின் தொகுப்பாளராக களமிறங்கியிருப்பதால், கமல்ஹாசன் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும் தனக்கே உரிய பாணியில் விஜய் சேதுபதி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.