தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் தொடர் தமிழில் கடந்த 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் சேதுபதிக்கு கண்டிஷன்:


பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிக்கும் தொடரான இந்த ரியாலிட்டி ஷோ நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. கமல்ஹாசன் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்க உள்ளார்.


மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி எப்படி கையாளப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் ஒரே ஒரு நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


என்ன நிபந்தனை?


விஜய் சேதுபதி பிரபல நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், தனது நண்பர்களுக்காக சிறு, சிறு பட்ஜெட் படங்களில் குறைவான சம்பளத்தில் நடித்து வருவதுடன், தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சிறு, சிறு பட்ஜெட் படங்களையும், அறிமுக நடிகர்களையும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு விளம்பரப்படுத்தியும் வருகிறார்.


இந்த சூழலில், பிக்பாஸ் தொடங்கும் நாள் முதல் அடுத்த 100 நாட்களுக்கு விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எந்தவொரு திரைப்படம் மற்றும் நடிர்களை விளம்பரப்படுத்தும் விதமாக எந்த பதிவும் இடக்கூடாது என்று பிக்பாஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிபந்தனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.


நாளை முதல் சீசன்:


பிக் பாஸ் விதித்துள்ளதாக வெளியாகியுள்ள இந்த நிபந்தனை ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், இந்த நிபந்தனைக்காகவும் சேர்த்தே விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் மிகப்பெரிய தொகையை ஊதியமாக வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


நாளை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 8 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. நாளை முதல் அடுத்த 100 நாட்களுக்கு பல்வேறு புதிய டாஸ்க்குகள், காரசாரமான விவாதம் என பல்வேறு திருப்பங்களுடன் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் யார்? யார்? என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.