பிக்பாஸில் இருந்து பிரதீப் ஆண்டனி ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வரும் நிலையில், இவற்றுக்கு பிரதீப் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
‘வாத்தியார்’ படத்தில் நடிகர் வடிவேலு அய்யனார் கதாபாத்திரத்தில் தன் பாடிகார்டுகள் உடன் தோன்றும் காமெடி வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரதீப், “சமூக வலைதளங்களில் என் விளையாட்டுக்கு வரும் ரெஸ்பான்ஸ்களை நான் இப்படிதான் பார்க்கிறேன்.
கூட நின்னதுக்கு நன்றி. என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல ஆர்ட்டிஸ்ட்டா ஆக நான் முயற்சி பண்றேன். நல்லாருங்க. அடுத்த வேலைய பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் போட்டியின் முதல் நாள் முதலே ஸ்ட்ராங்கான போட்டியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்ற வாரம் அவருக்கும் கூல் சுரேஷூக்கும் இடையே கடும் சண்டை வெடித்தது. தன் அம்மாவைப் பற்றி தவறாகப் பேசியதாக கூல் சுரேஷ் சண்டைக்கு செல்ல பிக்பாஸ் வீட்டில் கலவரம் வெடித்தது.
இந்நிலையில், நேற்று நடிகர் கமல்ஹாசன் வருகை தந்த எபிசோடில், பிரதீப் சக போட்டியாலர்களை காதல் செய்ய சொல்கிறார், கதவை மூடாமல் டாய்லெட் செல்கிறார், கெட்ட வாரத்தைகளால் சாடுகிறார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை பிக்பாஸ் போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்னிலையில் வைத்தனர்.
தொடர்ந்து தனித்தனியாக போட்டியாளர்களிடம் பிரதீப்பின் நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் அவருக்கு ரெட்கார்டு தரலாம் என வாக்களித்தனர். இதனையடுத்து நேற்றைய போட்டியின் இடையே உடனடியாக பிரதீப் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து பிரதீப்புக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் வலுக்கத் தொடங்கின.
“பெண்கள் பாதுகாப்பாக இல்லை எனக் கூறி பிரதீப் ஆண்டனியை எப்படி வெளியேற்றலாம், அது மிகப்பெரும் இழுக்கு, கமல்ஹாசன் பாகுபாடு பார்க்கிறார்” என்றெல்லாம் ரசிகர்கள் இன்று காலை முதல் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் களமாடி வந்தனர்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில், பெண்கள் சூழ கையில் ரெட்கார்டுடன் கொண்டாட்டமாக பிரதீப் இருக்கும் புகைப்படங்களையும் பிரதீப்பின் நண்பர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிரதீப்பின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கவின், கூட இருப்பவர்களுக்கு பிரதீப்பை தெரியும் எனும் பொருளில் முன்னதாக பதிவிட்டிருந்தார்.
மேலும் சின்னத்திரை வட்டாரத்தினரின் ஆதரவு பிரதீப்புக்கு வலுத்த நிலையில், பிக்பாஸின் முன்னாள் போட்டியாளர்களான சனம் ஷெட்டி, காயத்ரி ரகுராம், பாவ்னி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே எனப் பலரும் பிரதீப்புக்கு ஆதரவாக பதிவிட்டும் இது நியாயமற்ற தீர்ப்பு என்றும் குரல் உயர்த்தி வந்தனர். இந்த சூழலில் பிரதீப்பின் இந்த ட்வீட் கவனமீர்த்துள்ளது.