இந்தியா முழுவதும் பலராலும் கொண்டாடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சி `பிக் பாஸ்’. மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் முதலான மொழிகளில் வெளியாகியுள்ள `பிக் பாஸ்’ கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, சுமார் 15-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 100 நாள்கள் வரை ஒரு வீட்டினுள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது `பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பெரிதும் தெரியாத தகவல்களைப் பார்க்கலாம். 


- `பிக் பாஸ்’ நிகழ்ச்சி 2006ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி தொகுப்பாளராகப் பங்கேற்றார். தற்போது இந்தியில் சல்மான் கான், தமிழ் மொழியில் கமல்ஹாசன், தெலுங்கு மொழியில் நாகார்ஜூனா என முன்னணி நடிகர்கள் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். 


- `பிக் பாஸ்’ வீட்டிற்குள் மதுவுக்கு முழுத்தடை இல்லை. மது அருந்துவதை விரும்பும் போட்டியாளர்கள், மது இல்லாமல் நீண்ட நேரம் இருக்க முடியாதோர் ஆகியோருக்கு ஜூஸ் பாட்டிலில் மது வழங்கப்படுவதாகத் தகவல்கள் உண்டு. 


- போட்டியாளர்கள் அனைவருக்கும் தங்கள் கால்ஷீட் மதிப்பிலோ, வாரக் கணக்கிலோ, மொத்தமாக 100 நாள்களுக்கோ தொகை நிர்ணயிக்கப்பட்டு, சம்பளமாக வழங்கப்படும். 



- நடுவில் போட்டியில் இருந்து விலக விரும்பும் போட்டியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். போட்டியில் பங்கேற்க கையெழுத்திடப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில், போட்டியில் இருந்து விலக விரும்புவோருக்கு மிக அதிகமான தொகையை அபராதம் கட்ட நேரிடும். 


- வீட்டின் க்ளீனிங் பணிக்காகப் போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகக் காட்டப்பட்டாலும், வீட்டைச் சுத்தம் செய்ய பணியாளர்களும் உண்டு. எனினும், வெளியில் இருந்து வருவோருடன் பேசக் கூடாது என்பதால் சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் போட்டியாளர்கள் பேசுவதில்லை. 


- `பிக் பாஸ்’ வீட்டின் கண்ணாடிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் சிறந்த வியூ கிடைப்பதால், இந்த டெக்னிக் அனைத்து மொழி `பிக் பாஸ்’ வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது. 



- போட்டியாளர்கள் யாரும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து வெளியில் பகிரக் கூடாது. பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைக் கூட்ட இவ்வாறான முடிவுகளை `பிக் பாஸ்’ எடுத்தாலும், எப்படியோ வெளியில் கசிந்து விடுகிறது என்பது மற்றொரு டாபிக்!


- குறிப்பிட்ட பிராண்ட் துணிகளை விளம்பரப்படுத்துவதற்கு `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அனுமதி இல்லை. பிராண்ட் பெயரை வெளியில் காட்டும் உடைகள் அனுமதியில்லை. சில நேரங்களில், பிராண்ட் பெயரை மறைக்குமாறு செய்து, போட்டியாளர்கள் உடை அணிந்து வருவதும் உண்டு. 


- நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் அனைத்து எபிசோட்களையும் பார்ப்பதில்லை. பல பணிகளுக்கு இடையில் அனைத்து எபிசோட்களையும் பார்க்காவிட்டாலும், அவர் முக்கியமான நிகழ்வுகளையும், எபிசோட்களையும் பார்ப்பதுண்டு.


- போட்டியாளர்கள் அனைவரின் மருத்துவ அறிக்கைகளும் முன்கூட்டியே அளிக்கப்பட்டிருப்பதால், எப்போதும் மருத்துவக் கண்காணிப்பு போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.