விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் துவங்கிய நாள் முதல் அதை கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பவர்களும் உண்டு. தெலுங்கில் நாகார்ஜுனா, கன்னடத்தில் கிச்சா சுதீப், மற்றும் மலையாளத்தில் மோகன்லால் என தென்னிந்திய பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ஸ்டார் நடிகர்கள் தொகுத்து வழங்கி வந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பி வரிசையில் முன்னிலையில் இருந்து வந்தது. அதற்கு மிக முக்கியமான காரணம் உலகநாயகன் கமல் மட்டுமே. 




இப்படி சிறப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை மூலம் அறிவித்து இருந்தார் கமல்ஹாசன். அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இயலாது என கூறி ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து இருந்தார். 


அப்படி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க போவது இல்லை என்றால் அவரின் அவருக்கு பதிலாக யார் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற கேள்வி மேலோங்கி இருந்தது. நடிகர் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், சிம்பு, நயன்தாரா இப்படி பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 8 ஹோஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி வெளியிட உள்ளது என எக்ஸ் தள பக்கம் மூலம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் விஜய் டிவி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.






ஆம் பலரும் யூகித்து வைத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்காதது வருத்தம் என்றாலும் விஜய் சேதுபதியின் வர்ஷனில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து ரசிக்கலாம்.