தமிழில் உள்ள தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி விஜய் தவிர்க்க முடியாதது ஆகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


பிக்பாஸ்:


பிக்பாஸ் 7 சீசன்கள் இதுவரை ஒளிபரப்பாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் பெரியளவில் வெற்றி பெற வைத்தது கமல்ஹாசனே ஆவார், அவர் தொகுத்து வழங்கும் விதத்தை பார்ப்பதற்காகவே பிக்பாஸ் தொடரை பலரும் தொடர்ந்து பார்க்கின்றனர்.


ஆனால், நடப்பு சீசனை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பிக்பாஸ் தொடரில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, பிக்பாஸ் தொடரை தொகுத்து வழங்கப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏற்கனவே சிம்பு தொகுத்து வழங்கியபோது நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதனால், அவர் மீண்டும் தொகுத்து வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


விஜய் சேதுபதி:


இந்த சூழலில், பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி,


ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான் ஆகியோருடனும் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக உலா வருகிறார். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என்று பிக்பாஸ் குழு எதிர்பார்க்கிறது. ஆனால், விஜய் சேதுபதியின் பரபரப்பான கால்ஷீட்களுக்கு இடையில் அவர் பிக்பாசை தொகுத்து வழங்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


பிசியாக இருக்கும் விஜேஎஸ்:


ஷாருக்கானின் ஜவானில் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்ததில் இருந்து அவருக்கு பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் குவிகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பிசியாக நடிகராக உலா வரும் விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்ஸ், விடுதலை 2ம் பாகம் படங்களில் நடித்து வருகிறார்.


பிக்பாஸ் கடந்த சீசன் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாத நிலையில், கமல்ஹாசன் மீதும் விமர்சனங்கள் எழுந்தது. ஏராளமான விமர்சனங்கள், குளறுபடிகளுடனே சென்ற கடந்த பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.