Bigg Boss 7 Tamil: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த கானா பாலா வெளியேற உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபரில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் போட்டி 47 நாட்களை கடந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்கள் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. வழக்கத்து மாறாக இந்த சீசனில் 5 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். இதனால், குழப்பம், சர்ச்சை, சண்டை, வாக்குவாதம், சோகம், அழுகை என ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களை பிக்பாஸ் கவர்ந்திழுத்தது. 

 

ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் போட்டியாளர்களை கமல்ஹாசன் சந்திப்பதும், அவர்களுக்கு நீதி வழங்குவதும் வாடிக்கையானது தான். அந்த வகையில் இன்றைய எபிசோடுக்காக போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், போட்டியாளர்களிடையே நிகழ்ந்த சலசலப்புகள், சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது இந்த வார எலிமினேஷன் யார் என்பதைக் குறிக்கும் விதமாக கமல்ஹாசன் பேசியுள்ளார். அதன்படி பார்க்கையில் இந்த வாரம் கானா பாலா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

 

நாமினேஷனில் இருந்த கானா பாலா மற்றும் சரவண விக்ரம் ஆகியோரில் ஒருவர் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கானா பாலா வெளியேறியுள்ளார். வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் சென்றதில் இருந்து கானா பாலா பெரிதாக ரசிகர்களை கவராததாலும், அவர் போட்டிகளில் பெரிதாக பங்கேற்காததாலும் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அன்னபாரதி வெளியேறினார். தற்போது இரண்டாவதாக கானா பாலா வெளியேறியுள்ளார். 

 





 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தினேஷ், விசித்ரா, பூர்ணிமா, மாயா, விஷ்ணு, நிக்சன், கூல் சுரேஷ், மணி, ரவீனா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்டோர் உள்ளனர்.