சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 5  மூலம் அதிகம் அறியப்பட்டவர் நடிகர் அபிநய்.  இவர் தமிழில் ராமானுஜன், சென்னை 28 பார்ட் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு விளையாடிய இவர்  காதல் சர்ச்சையிலும் சிக்கினார். பிக்பாஸில் சக போட்டியாளராக பங்கேற்ற பாவனிக்கும் இவருக்கும் இடையே காதல் சர்ச்சை கிளம்பி அடங்கியது. பிக்பாஸில் சர்ச்சை அடங்கினாலும், சோஷியல் மீடியாக்கள் தொடர்ந்து புகைந்துகொண்டே இருந்தன. 






இந்நிலையில் பிக்பாஸ் காதல் பிரச்னை அபிநய் வீட்டிலும் எதிரொலித்ததாக கூறப்பட்டது. பாவனி உடனான காதல் சர்ச்சையால் அபிநய்யின் மனைவி அபர்ணா அவரை பிரிய உள்ளதாக கூறப்பட்டது. அந்த தகவலுக்கு பலமாக அபிநய்யின் மனைவி தனது கணவரின் பெயரை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார்.  ஆனாலும் அது வெறும் வதந்திதான் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் 5க்கு பிறகு  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அபிநய் பங்கேற்றார். ஆனாலும் அங்கிருந்தும் அவர் வெளியேறினார். இந்த நிலையில் விவாகரத்து தகவல்களுக்கு பதில் அளித்து முடிவு கட்டியுள்ளார் அபிநய். 






சமீபத்தில் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் அபிநய் உரையாடினார்.  அதில் ஒருவர் உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அபிநய், 'முதலில் விவாகரத்து செய்தியைக் கேட்டு ஷாக் ஆனேன். பொறுப்பில்லாத நபர்கள் சிலரால் பரப்பப்படும் இது மாதிரியான பொய் செய்தியால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் துரதிர்ஷடவசமானது.  அபர்ணாவும், நானும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.