விஜய் டிவியின் மிகவும் அபிமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஏழு சீசன்களாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தன்னுடைய தொடர்ச்சியான கமிட்மென்ட்களால் வர இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க இயலாது என்பதை அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார். மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து இருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக யார் அந்த நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற கேள்வியும், ஆதங்கமும் எழுந்தது. இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான அதிகாரபூர்வமான ப்ரோமோ ஒன்றின் மூலம் அடுத்த ஹோஸ்ட் யார் என்பதை ரிவீல் செய்தது.
சரத்குமார், சிம்பு, நயன்தாரா என பலரும் தொகுத்து வழங்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதியானது. ஒரு எபிசோடை தொகுத்து வழங்க அவருக்கு சம்பளமாக ரூ.1 கோடி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பவர்கள் குறித்த தகவல்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அருண், சர்ச்சைகளில் சிக்கி பிரபலமான டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலியும், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோயா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர் என்பது ஆரம்பத்தில் இருந்தே கூறப்படுகிறது.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகருமான சேரனை தொடர்ந்து இந்த சீசனில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் பிரபலமான சமையல் கலைஞர் மற்றும் குக்கு வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக பிரபலமாகி உள்ள மாதம்பட்டி ரங்கராஜ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது புதிய தகவலாக விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலான 'பாக்கியலட்சுமி' தொடரில் பாக்கியாவின் இரண்டாவது மருமகள் அமிர்தாவாக நடித்து வரும் நடிகை அக்ஷிதா கலந்து கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் கசிந்த உடனே அவர் அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பாக்கியலட்சுமி சீரியலில் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் மாற்றப்படுவாரா? அல்லது சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரித்திகா விலகியதால் அக்ஷிதா அந்த இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பிக் பாஸ் 3 போட்டியாளராக இருந்தவர்.
மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 13ம் துவங்க உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.