பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக நடிகை வினுஷா தேவி செல்ல மறுத்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டதட்ட 60 நாட்களை நெருங்கி விட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7வது சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது.


மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய போது முதலில் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். அதன்பிறகு ஒருமாதம் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரீயாக 5 போட்டியாளர்களும் உள்ளே நுழைந்தனர். இப்படியான நிலையில் தற்போது கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன் ஆகியோர் உள்ளே உள்ளனர். 


அதேசமயம் ஏற்கனவே வெளியே தள்ளப்பட்ட அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகிய இருவரும் மீண்டும் உள்ளே நுழைந்துள்ளனர். கடந்த வாரம் வெளியான அறிவிப்பில், 3 போட்டியாளர்கள் திரும்பி வரப்போகிறார்கள் என சொல்லப்பட்டது.  அதில் 2 பேர் மட்டுமே வந்த நிலையில் 3வதாக உள்ளே வருவார் என கணிக்கப்பட்ட வினுஷா தேவி வரவே இல்லை. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். 


மேலும் நிக்ஸனால் உருவக்கேலி செய்யப்பட்ட வினுஷா தேவி, மீண்டும் உள்ளே வந்து அவருக்கு பதிலடி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, "ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றோம் என்ற நிலைக்கு வினுஷா தேவி வந்து விட்டார். காரணம் பிக்பாஸ் வீட்டில் அவர் எதுவுமே பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதேபோல் சேனல் வெளியிட்ட வீடியோவில் அவர் மிக்ஸர் சாப்பிடுகிறார் என கலாய்த்து பதிவு வெளியிட்டு பின்னர் நீக்கியது. மேலும் நிக்ஸன் உருவக்கேலி செய்தது என பல சம்பவங்கள் வினுஷா நொந்துக்கொள்ளும் அளவுக்கு நடந்தது.அதனால் தான் அவர் வாய்ப்பை மறுத்தார்” என கூறப்படுகிறது.