விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான டாஸ்க் இருந்தாலும் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இரண்டு டாஸ்க்குகளுக்காக காத்திருப்பார்கள். அதில் ஒன்று ஃப்ரீஸ் டாஸ்க் மற்றொன்று பணப்பெட்டி டாஸ்க்.
பிக் பாஸ் சீசன் இறுதி கட்டத்தை நெருங்கும்போது பணப்பெட்டி டாஸ்க் ஒன்று நடைபெறும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக பணப்பெட்டியின் தொகை அதிகரிக்கும். ஒரு சில சமயங்களில் அதிகரிக்கும் என போட்டியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் திடீரென பணத்தொகையை குறைத்து விடுவார் பிக்பாஸ்.
பணப்பெட்டியை தேர்ந்து எடுக்கும் போட்டியாளர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள்தான். ஏன் என்றால் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு நாளுக்கான சம்பளம் இவ்வளவு என ஏற்கனவே ஒப்பந்தம் செய்து இருப்பார்கள். அவர்கள் எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்கு பிடிக்கிறார்களோ அத்தனை நாளுக்கான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் அதுவே அவர்கள் பணப்பெட்டியை தேர்ந்து எடுத்தால் அது அவர்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகை. சம்பளத்துடன் சேர்ந்து அந்த பணப்பெட்டியில் இருக்கும் தொகையும் வழங்கப்படும். டைட்டில் வின்னருக்கு அடுத்தபடியாக அதிக தொகையை பெறுபவர்கள் இந்த பணப்பெட்டியை தேர்ந்து எடுப்பவர்களாகவே இருப்பர்.
டைட்டில் நமக்குத்தான் என மிகவும் நம்பிக்கையுடன் சில போட்டியாளர்கள் இருப்பார்கள். இந்த பணப்பெட்டி எல்லாம் நமக்கு தேவையே இல்லை "கப் முக்கியம் பிகிலு" என்ற ரேஞ்சில் டைட்டிலை தட்டி விடுவோம் என முழு நம்பிக்கையுடன் இருப்பவர்கள் இந்த பணப்பெட்டியை உதாசீனப்படுத்திவிடுவார்கள். இறுதியில் டைட்டிலை வெற்றி பெற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்புவார்கள். டைட்டில் வின்னர் தவிர அடுத்த இடங்களில் வருபவர்களுக்கு சம்பளம் மட்டுமே வழங்கப்படும். இது தான் முந்தைய சீசன்களில் பங்கேற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் வழங்கிய தகவல்.
கவின், சிபி, கேப்ரில்லா, அமுதவாணன் உள்ளிட்டோர் முந்தைய பிக் பாஸ் சீசன்களில் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி பண பெட்டியை கைப்பற்றியவர்கள். அந்த வகையில் விஷ்ணு ஏற்கனவே டிக்கெட் டூ பினாலேவில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டார். அர்ச்சனா, தினேஷ், விசித்திரா, விஜய், மாயா, பூர்ணிமா, மணிச்சந்திரா உள்ளிட்டோர் மற்ற போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 போட்டியில் யார் பணப்பெட்டியை எடுத்து கொண்டு புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அனேகமாக அது இன்றைய எபிசோட் அல்லது நாளைய எபிசோட்டில் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.