பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்த மணி சந்திராவின் அம்மா மேடையில் கண்கலங்கிய சம்பவம் இந்நிகழ்ச்சியை காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கியது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். முதலில் இந்நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா” ஆகிய 18 பேரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் அர்ச்சனா, தினேஷ், விஜே பிராவோ, கானா பாலா, அன்னலட்சுமி ஆகியோர் உள்ளே வந்தனர்.
இதில் இறுதிப்போட்டிக்கு அர்ச்சனா, மாயா, மணி சந்திரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். மணி சந்திரா 2வது இடத்தையும், மாயா 3வது இடத்தையும் பிடித்தனர். மிகப்பிரமாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் மணி சந்திராவின் குடும்பத்தினர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
அதன்படி பேசிய மணியின் சகோதரர், “என்ன பேசுவதென்றே தெரியவில்லை. இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தோம். எங்க அப்பாவை நினைத்து பெருமைப்பட்டுள்ளோம். அவருக்கு பிறகு மணி அத்தகைய பெருமையை நாங்கள் உணரும்படி செய்துள்ளார். இங்க வந்ததே மிகச்சிறந்த விஷயம் தான்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மணியின் அம்மா, “இவ்வளவு தூரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணி வந்ததற்கு விஜய் டிவிக்கும், உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவன் அப்பா உங்களின் தீவிர ரசிகர். மணியில் இந்த வெற்றியை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதை விட அவனது அப்பா இருந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அதான் எனக்கு கஷ்டமா இருக்கு. வேறு எதுவும் இல்லை” என கூறினார்.
மணிசந்திரா பேசும்போது, “நான் அர்ச்சனா ஜெயித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை. என்னிடம் நிறைய பேர் நீ நன்றாக செய்தாய் என சொன்னார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த நிகழ்வுகளுக்கு சண்டை போட வேண்டும். எந்த நிகழ்வுகளுக்கு பேச வேண்டும் என்பதில் தெளிவு இருந்தால் போதும். அதை நான் பின்பற்றியதாக நினைக்கிறேன். என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி. நான் வெளியே வந்து உங்கள் அனைவரையும் வேறொரு பாணியில் மகிழ்விப்பேன்” என கூறினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.