எனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்புவதில் எனக்கு விருப்பமே இல்லை என டைட்டில் வென்ற அர்ச்சனாவின் அப்பா தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. 


பிக்பாஸ் சீசன் 7:


சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் 7வது சீசனில் கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, விசித்ரா, பவா செல்லத்துரை, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், சரவண விக்ரம், வினுஷா தேவி, நிக்ஸன், ஐஷூ, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன்,அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அன்னலட்சுமி, தினேஷ், அர்ச்சனா, விஜே பிராவோ, கானா பாலா என 23 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 


இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. 105 நாட்கள் நடந்த இந்நிகழ்ச்சியில் இறுதியாக அர்ச்சனா, மணி சந்திரா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகிய 3 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இதில் மாயா 3ஆம் இடம் பிடிக்க, அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா குடும்பத்தினர் பேசியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 






மகளை அனுப்ப விருப்பமில்லை:


அர்ச்சனாவின் அப்பா பேசும் போது, “உலகநாயகன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என் மகள் அர்ச்சனாவை அனுப்புவதில் எனக்கு விருப்பமில்லை. வெளியில் வரும்போது உன் பெயரை கெடுத்துக் கொண்டு தான் வருவாய் என சொன்னேன். ஆனால் உள்ளே சென்ற பிறகு அர்ச்சனா இப்படியெல்லாம் பேசுவார், புரிதலோடு நடந்து கொள்வார் என பார்த்து வியந்தேன். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வாரம் தோறும் நீங்கள் (கமல்ஹாசன்) கொடுத்த அறிவுரை மிகவும் உதவியாக இருந்தது.


இங்கு அர்ச்சனாவை பாதுகாத்தது நீங்கள் மற்றும் பிக்பாஸ் குழு மட்டுமல்ல, சுற்றியுள்ள 67 கேமராக்களும் தான். உன்னுடைய மிகச்சிந்த பாதுகாப்பே அது தான். நீ பயப்படாமல் இருந்துட்டு வா என சொன்னேன். அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கிய விஜய் டிவி குழுமத்துக்கு நன்றி” என கூறினார். 


அதேசமயம் அர்ச்சனா டைட்டில் வென்ற பிறகு பேசிய அவரது அம்மா, “எனக்கு என் பொண்ணு ஜெயித்ததில் மிகவும் சந்தோசம் தான். அவளுக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் மனதளவில் ரொம்ப உடைந்து போயிருந்தேன். இந்த வெற்றி ரசிகர்களாகிய உங்களைத்தான் சேரும்” என தெரிவித்தார்.