பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஐஷூ வெளியேற்றப்பட்ட நிலையில் நிக்ஸன் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன். விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கம்போல நடிகர் கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயா, பூர்ணிமா,ஜோவிகா, ஐஷூ, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய் உள்ளிட்டோர் கடந்த வாரம் போட்டியாளர்களாக தொடர்ந்தனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் 43வது நாளில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷூ வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
பிக்பாஸ் வீட்டில் நடப்பு சீசனில் புரியாத புதிராக இருந்தது நிக்ஸன் - ஐஷூ இடையேயான உறவு தான். அது நட்பா, காதலா என வீட்டில் இருப்பவர்களே குழம்பி போகும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இருந்தது. கண்ணாடிக்கு இருபுறமும் நின்று முத்தமிட்டது தொடங்கி இரட்டை அர்த்தத்தில் பேசியது வரை இணையவாசிகள் இருவரின் செயல்பாடுகளையும் கண்டித்தனர். ஆரம்பத்தில் நிக்ஸன், ஐஷூ இருவருமே நன்றாக பெர்பார்மன்ஸ் செய்த நிலையில், போக போக இருவரின் நெருக்கம் பிக்பாஸ் கோர்ட் டாஸ்க்கில் வழக்காக வந்தது.
இந்நிலையில் எதிர்பார்த்தபடி ஐஷூ வெளியேற்றப்பட்டார். அவரின் எவிக்ஷனை ஏற்றுக்கொள்ள முடியாத நிக்ஸன் கதறி அழுத காட்சிகள் எபிசோடில் வந்தது. மேலும் அவர் சரவண விக்ரமிடம் வெளியே கார்டன் ஏரியாவில் நின்று பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில். “பெரிய தப்பு. யார்கிட்டேயும் தலையீடவே கூடாது. பேசுனா கூட வெளியே லவ் பண்ணுவாங்கன்னு நினைச்சிக்கிடுவாங்கன்னு பயமா இருக்கு. ஒரு பையனும், பொண்ணும் பேசுனா லவ்வா, அது லவ்வா மட்டும் தான் இருக்குமா. அங்க வீட்டுல புரிஞ்சிக்கணும். பிக்பாஸ்ல சொன்னதெல்லாம் சும்மா ஜோக் தான். ஐஷூவுக்கு இருக்க திறமைக்கு அவ பெரிய நிலைமைக்கு போவா” என தெரிவிக்கிறார் நிக்ஸன். இதனைப் பார்த்த இணையவாசிகள் அப்ப ஐஷூ பற்றி ரசிகர்கள் தான் தப்பா பேசினார்களா, ஏன் இப்படி பழி போடுகிறீர்கள் என நிக்ஸனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.