பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராப் பாடகர் நிக்ஸன் தன்னை உருவக்கேலி செய்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சீரியல் நடிகை வினுஷா தேவி அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.


விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 38 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடக்கம் முதலே இந்நிகழ்ச்சி மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தைகள் பேசுவது, உருவக்கேலி செய்வது, கும்பலாக சேர்ந்து கொண்டு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது என சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.


அப்பட்டமாக சிக்கிய நிக்ஸன்


இதனிடையே நேற்று (நவம்பர் 8) ஒளிபரப்பான டாஸ்க்கில் ’இந்த வீட்டில் உள்ள நபர்கள் சொன்ன கமெண்டுகள் காட்டப்படும். அதை சொன்ன நபர்கள் ஏன் சொன்னார்கள்? என்பதை விளக்க வேண்டும்’ என கொடுக்கப்பட்டது. அப்போது, ‘வினுஷா வேலைக்காரி. அவ என்னோட டைப் இல்ல. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும். வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி பெர்ஃபெக்டா இருக்கணும்’ என்ற கமெண்ட் டிவியில் காட்டப்பட்டது. 


இது சில வாரங்களுக்கு முன்பு, நிக்ஸன் ஐஷூவிடம் தெரிவித்த கருத்துகளாகும். இதற்கு விளக்கமளிக்க எழுந்த நிக்ஸன், ‘தான் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும், நம்புகிறவர்கள் நம்புங்கள், இல்லாவிட்டால் போங்க, நான் விளையாட்டாக அப்படி பேசினேன், அதற்காக வினுஷாவிடம் மன்னிப்பும் கேட்டேன்’ என மழுப்பலாக பதில் ஒன்றை சொன்னார். நிக்ஸன் உருவக்கேலி செய்தது மட்டுமல்லாமல் அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசியதற்காக அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இப்படியான நிலையில், உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை மிக நீண்ட விளக்கத்துடன் வினுஷா தேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


நிக்ஸன் சொன்னது எல்லாமே பொய்


அதில், “நான் இப்போது பிக்பாஸ் உள்ளே இல்லை என்றாலும் நிக்ஸன் விவகாரத்தை பற்றி பேசவும், எனக்காக நிற்கவும் விரும்புகிறேன். முதல் வாரத்தில், நிக்ஸனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. நான் அவரை ஒரு சகோதரனாக உண்மையாகவே கருதினேன். நான் அவரிடம் அப்படித்தான் நடந்து கொண்டேன். ஆரம்பத்தில் நிக்ஸன் எப்போதும் என்னை செய்யத் தொடங்கினார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. அது மிகவும் வேடிக்கையாக இருந்தது.


இருப்பினும், நேரம் செல்லச் செல்ல நிக்ஸன் தன் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினார். மேலும் அவரது நடவடிக்கைகள் என்னைக் காயப்படுத்தியதால் ட்ரோல் செய்வதை நிறுத்தும்படி அவரிடம் சொன்னேன். இந்த ட்ரோல் சம்பவதுக்காக மட்டுமே ஒரு நாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் என்னை உருவக்கேலி செய்ததற்கு எல்லாம் நிக்ஸன் மன்னிப்பு கேட்கவில்லை. 


தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டிய தகவல்கள் 



  • நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்ஸன் என்னை உருவக்கேலி செய்தது பற்றி பேசவோ அல்லது மன்னிப்போ கேட்கவில்லை. 

  • நிக்ஸன் எனக்கு இவை அனைத்தும் தெரியும் என்றும் பொய்யான தகவலை சொல்கிறார்.   எனக்கு அது தெரியாது. 

  • பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகுதான் நான் அதை பற்றி தெரிந்து கொண்டேன்

  • நடந்த சம்பவத்திற்கு இப்போது நிக்ஸன் மன்னிப்பு கேட்டாலும் அது அவரை நல்ல நபராக மாற்றாது.

  • புல்லி கேங் என சொல்லப்படுபவர்களுக்கு (மாயா, பூர்ணிமா, நிக்ஷன், ஜோவிகா, ஐஷூ) என் பதில் என்னவென்றால் ‘இது எனக்கு வேடிக்கையான ஒன்றோ அல்லது நகைச்சுவையான ஒன்றோ அல்ல. 

  • கடந்த வாரத்தில் "உரிமை குரல்" எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே?

  • எனக்காக குரல் எழுப்பிய விசித்ராவிற்கு நன்றி 


நான் வீட்டில் இருக்கும் போது அவர் எனக்கு ஏற்படுத்திய வலியை மீறி  நிக்ஸனை மிகவும் மதித்தேன். அவரை ஒரு சகோதரனைப் போல கருதினேன். இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோ மற்றும் கருத்தைப் பார்த்த பிறகு, நான் அவர் மீதான மரியாதையை இழந்துவிட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இந்த விவகாரத்தைப் பற்றி பேசுவார் என நம்புகிறேன். இந்த பிரச்சினையில் நிக்ஸனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கும், எனக்காக நிற்கும் மக்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்” என வினுஷா தேவி தெரிவித்துள்ளார்.