பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 4வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனைப் பார்க்கும் போது இன்னைக்கு போட்டியாளர்களிடையே சண்டை உறுதி என்பது தெரிய வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று கொடுக்கப்படும் டாஸ்கை நடிகை மாயா படிக்கிறார். அதில், “இது உங்களுக்கான முதல் ஷாப்பிங் ரீபேமண்ட் டாஸ்க். இதன் பெயர் “வெயிட் பார்ட்டி”. இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்து செல்லப்படும். அதன்படி 340 கிலோ என்று எடை நிர்ணயிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்து வரலாம். அதோடு எடை மேடையில் நிற்க வேண்டும்” என தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போட்டியாளர்களில் சிலர் ஆளுக்கொரு ஒன்றுக்கு இரண்டு பொருட்களை கொண்டு எடை மேடையில் ஏறி நிற்கிறார்கள். இதில் அனைவரது எடையையும் சேர்த்து 570 கிலோவுக்கு மேல் செல்கிறது. அதன்படி கூல் சுரேஷ், விஜய்,பிரதீப் ஆண்டனி, பூர்ணிமா ரவி உள்ளிட்ட சிலர் அதில் ஏறி நிற்கிறார்கள். எடை சரியாக வர வேண்டும் என்பதற்காக கூல் சுரேஷ் “யாராவது சட்டையை கழட்டுங்க” என தெரிவிக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.