பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ள நடிகர் கூல் சுரேஷ் அந்நிகழ்ச்சியை பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்து பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. 


சின்னத்திரையில் ரசிகர்களிம் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் திகழ்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையும்,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. 


அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. அதேபோல் விஜய் டக்கர், விஜய் சூப்பர் ஆகிய சேனல்களிலும் மறு ஒளிபரப்பு செய்யப்படுவதால் எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் தான். பிக்பாஸ் 7வது சீசனில்  கூல் சுரேஷ், பவா செல்லதுரை,  சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ,   யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், விஜய் வர்மா, அனன்யா ராவ், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார்,  வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர். 


இதில் நடிகர் கூல் சுரேஷ் பற்றி நாம் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு இருக்கும் இடங்களில் அலப்பறையான சம்பவங்களால் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்புகூட பட நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளருக்கு வலுக்கட்டாயமாக மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் எழவே, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் இருந்தே தனது சம்பவங்களால் மீம் மெட்டீரியலாக மாறியும் வருகிறார். பவா செல்லதுரையின் கதையை கேட்டு கண்ணீர் விட்டார்.






கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வார் என யாரும் எதிர்பார்க்கவேயில்லை.  அதற்கு காரணம், பல பேட்டிகளில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது. அதில் ஒரு வீடியோவில் “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு தேவை இல்லை. எத்தனை கோடி குடுத்தாலும் நான் போகமாட்டேன் என வாந்தி எடுப்பது போன்று செய்கை செய்து கடுமையாக விமர்சித்தார்.


இன்னொரு வீடியோவில் என்னங்க பிக்பாஸ்..சின்ன சின்ன பொண்ணுங்களை எல்லாம் கூப்பிட்டு வந்து  காலையில பாட்டு பாடுனதும் அரைகுறை ஆடையுடன் ஆட விடுகிறார்கள் (அதில் கேவலமாக சில செய்கைகளையும் செய்து காட்டுவார்). பிக்பாஸ் டைட்டில் பட்டம் வாங்கி வந்து யார் பெரிய இடத்துக்கு போயிருக்கிங்க சொல்லுங்க பார்க்கலாம்”என அந்த வீடியோவில் கூல் சுரேஷ் கூறியுள்ளார். இந்த வீடியோ மீண்டும் ட்ரெண்டாகியுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் விரைவில் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 




மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil : மீண்டும் சர்ச்சையில் விசித்ரா.. அனன்யா உடலில் இருக்கும் டாட்டூவை காட்டச் சொல்லி வற்புறுத்தல்..!