பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவண விக்ரம் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சின்னத்திரையில் மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துவிட்டது. இப்படியான நிலையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ்  7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி இதுவரை 82நாட்கள் நிறைவு செய்துவிட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை முதல் நாளில் 18 போட்டியாளர்களும், அதன்பிறகு ஒரு மாதம் கழித்து வைல்ட் கார்டு எண்ட்ரீ மூலம் 5 பேர் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


தற்போது மாயா, பூர்ணிமா, அர்ச்சனா,  விஜய் வர்மா,நிக்ஸன்,விசித்ரா, தினேஷ், மணி சந்திரா, ரவீனா, விஷ்ணு விஜய் ஆகிய 10 பேர் மட்டுமே போட்டியாளர்களாக உள்ளே இருக்கின்றனர். மேலும் இன்னும் இரண்டு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில்  இந்த வாரம் அந்த வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின்  குடும்பத்தினரும்  நிகழ்ச்சிக்கு வருகை தந்து இதுநாள் வரை போட்டியாளர்களின் செயல்பாடுகள் பற்றி வெளிப்படையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரவீனா, விசித்ரா, சரவண விக்ரம் ஆகிய 3 பேரும் இடம் பெற்றிருந்தனர். இதில் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தரப்பு ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். முன்னதாக கடந்த டிசம்பர் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்‌ஷன் நடைபெறுவதாக இருந்தார். அந்த வாரம் பல சர்ச்சையில் சிக்கிய நிக்ஸன் வெளியேற்றப்படுவார் என சொல்லப்பட்ட நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதால் நாமினேஷன் நடைபெறவில்லை. 






இப்படியான நிலையில் இந்த வாரம் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு எவிக்‌ஷன் நடைபெறாது என அனைவரும் நினைத்தனர். ஆனால் மாறாக விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தான் டைட்டில் பட்டம் வெல்வேன் என சரவண விக்ரம் நம்பிக்கையும் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கே இப்படி ஒரு நிலையா என ரசிகர்கள் புலம்பியுள்ளனர். மேலும் வெளியே வந்த பிறகு சினிமாவில் நடிப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.