பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நடிகை விசித்ரா பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வார நாட்களில் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடந்து 7வது சீசனாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 


தற்போது விஜய் வர்மா, பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணன், அர்ச்சனா, விசித்ரா, மணி சந்திரா, தினேஷ், விஷ்ணு விஜய் உள்ளிட்ட 8 பேர் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் நடந்த இரட்டை எவிக்‌ஷனில் ரவீனா தாஹா, நிக்ஸன் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில் இவர்களில் சரி பாதி பேரை போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதால் பிக்பாஸ் பல யுக்திகளை கையாண்டு வருகிறார். 


அந்த வகையில் வழக்கம்போல பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதில் காட்டப்படும் தொகை அவ்வப்போது உயரும். இதனை எடுத்துக் கொண்டு வெளியேற நினைப்போர் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. எப்போதும் தான் ஜெயிக்க மாட்டோம் என நினைக்கும் ஒருவர் போட்டியிலிருந்து வெளியேற பணப்பெட்டியுடன் செல்வது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களாக உள்ளது. இப்படியான நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பணம் 9 லட்சம் வரை உயர்வதாகவும், பின்னர் ரூ.3.50 லட்சத்துக்கு இறங்குவது போலவும் காட்டப்பட்டது. 



யாருமே பணப்பெட்டியை எடுக்க முன்வராரததாகவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஆனால் ரூ.13 லட்சம் பணத்துடன் நடிகை விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய எபிசோடில் இது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற வயதான நபர்களில் விசித்ராவும் ஒருவர். முன்னதாக ஒளிபரப்பான சீசன்களில் வயது மூத்த போட்டியாளர்கள் ஒரு மாதம் வரை அதிகப்பட்சம் தாக்கு பிடித்திருந்தார்கள். ஆனால் இம்முறை களமிறக்கப்பட்ட விசித்ரா கிட்டதட்ட 94 நாட்கள் வரை தாக்குப்பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் டாஸ்க்குகளில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.