பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களை கடந்து விட்ட இந்நிகழ்ச்சியானது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 


இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் “உங்கள் வாழ்க்கையிலும் உலகம் அதிரும் படியான சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்கள் உங்களை உருவாக்கி இருக்கலாம், அல்லது அடையாளம் காட்டி இருக்கலாம். பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் அது போன்று உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்”  என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் நடிகை விசித்ரா தனது ஷூட்டிங்கில் பாலியல் தொல்லை நடந்த சம்பவத்தை பகிர்ந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இப்படியான நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான ஆர்.ஜே.பிராவோ தெரிவித்த கதை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பேச்சில், “எங்க அப்பாவுக்கு தான் நான் டிவியில், மீடியாவில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனக்கும் பெரிதாக எதுவும் வரவில்லை. அவரது உயிர் என் கண் முன்னாடி தான் போனது. இப்படி இருக்கும் போது எனக்கு ஒரு போன் வந்தது. ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் பேசினார். “தம்பி நீ வா. உன்னை வச்சி பெருசா ஒரு விளம்பரம் படம் ஷூட் பண்றேன்” என சொன்னார். அவர் யாரென்றே எனக்கு தெரியாது.






இருந்தாலும் கூப்பிட்டதால் கோயம்புத்தூருக்கு சென்றேன். அங்க ஹோட்டல் ரூமுக்குள் கூப்பிட்டு போனதும் கதவை பூட்டி விட்டு என்னுடைய சட்டையை கிழிக்க தொடங்கினார். சொல்லப்போனால் அது ஒரு பாலியல் தொல்லை முயற்சி தான். எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. கையெல்லாம் காயம் ஏற்பட்டது. இப்படியெல்லாம் நியூஸை படித்துள்ளேன். ஆனால் எனக்கே இப்படி நடக்கும் போது அதிர்ச்சியாக தான் இருந்தது. எதுக்குடா இங்க வந்தோம்? இந்த வாய்ப்பு நமக்கு தேவையா? ஒரு வாய்ப்புக்காக யாரையோ நம்பி சீர்கெட்டு இங்க வந்து நிற்கிறோமே என நினைத்து என்னை நானே அசிங்கமாக நினைத்துக் கொண்டேன்.


கண நேரத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவரை தள்ளி விட்டு சட்டை கூட இல்லாமல் அந்த ஹோட்டலை விட்டு ஓடினேன். எதுவும் நடக்கல. ஆனால் அந்த சம்பவத்தில் இருந்து மீள முடியவில்லை. மனதில் ரொம்ப காயமாக மாறி விட்டது. இதனால் சக மனிதர்களுடன் சென்றால் கூட பயமாக மாறிவிட்டது. இதுக்காகவே நான் துபாய் நாட்டுக்கு ஓடி விட்டேன். எனக்கு இங்கே சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.