விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் எங்கிருந்து எப்படி பிரச்சினை வெடிக்கும் என்றே தெரியவில்லை. மிகவும் பரபரப்பாக நகர்ந்து வரும் இந்த சூழலில், ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸூக்கு இடையில் நல்ல ஒரு புரிதலைக் கொண்டு வரும் ஒரு சுற்றாக கருதப்படுவது "கடந்து வந்த பாதை" சுற்று.
இந்த ‘கடந்து வந்த பாதை’ சுற்று மூலம் ஒவ்வொரு போட்டியாளரும் அவரவரின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சில உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து, அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதை ஆழ் மனதில் இருந்து வெளிப்படையாக பேசுவார்கள்!
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இன்று இந்த 'கடந்து வந்த பாதை' சுற்று நடைபெறுகிறது. அதற்கான ப்ரோமோ வெளியானதில் யுகேந்திரன், அக்ஷயா, விஜய் வர்மா, கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
யுகேந்திரன் பேசுகையில் "என்னுடைய பெயரில் இருக்கும் வாசுதேவன் என்ற பெயர் பல இடங்களிலும் எனக்கு நிறைய அட்வான்டேஜாக இருக்கும் என நினைப்பார்கள். ஆனால் உண்மையில் பல இடங்களில் அது எனக்கு டிஸ்அட்வான்டேஜாக தான் இருந்துள்ளது" என்றார்.
அடுத்ததாக வந்த அக்ஷயா "என்னுடைய வாழ்க்கை எப்பவுமே எனக்கு சாடிஸ்ஃபைட்டா இருந்ததே இல்லை" என சொல்ல, விஜய் தனது அப்பாவின் இறப்பு பற்றி பேசுகிறார். அடுத்ததாக வந்த கூல் சுரேஷ் "நான் எட்டாவது படிக்கும்போது வீட்டில் ரொம்ப கஷ்டம். காலையில தினமும் வீடுவீடாகப் போய் பேப்பர் போடுவேன். நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் வந்தேன்" என அழுது கொண்டே அவர் பேசுகையில் பிரதீப்பும் கண்கலங்கி விடுகிறார்.
மிகவும் எமோஷனலான இந்த "கடந்து வந்த பாதை" சுற்றைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். மேலும் இன்றைய எபிசோடில் மற்ற போட்டியாளர்களின் கதைகளும் இடம்பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
அடுத்ததாக வெளியாகியுள்ள இன்றைய பிக்பாஸ் எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அமைதியாக இருந்த விஷ்ணு மீண்டும் இன்று கலாட்டா செய்ய துவங்கிவிட்டார்.
காபி போட்டு தர மாட்டியா? என பூர்ணிமாவை வம்புக்கு இழுத்து பர்சனலா டார்கெட் செய்யுற என சத்தம் போடுகிறார். விஷ்ணு போடும் கூச்சலில் அனைவரும் ஒன்றும் புரியாமல் திகைப்பாக பார்க்கிறார்கள்.
"சம்பந்தமே இல்லாமல் என்கிட்டே வந்து காபி போடுன்னு சொன்னேன்ல.. ஏன் சும்மா சுத்திசுத்தி வந்துகிட்டு இருக்கனு கேக்குறாரு. உன்னை கேட்டாங்கன்னா நீ பண்ணு" என பதிலுக்கு கத்துகிறாள் பூர்ணிமா.
"நீ தான் ரொம்ப பர்ஃபெக்ட்னு நினைச்சுட்டு இரு. நீ தான் இருக்குறதுலே ஒர்ஸ்ட் இங்க" என பூர்ணிமாவை பார்த்து சொல்கிறார் விஷ்ணு. இந்நிலையில், இன்றைக்கு எபிசோட் முழுக்க எமோஷனலா அழுகாட்சியாக இருக்கும் என பார்த்தால், கலகலப்பாக சண்டை கூட நடக்குது என சந்தோஷத்தில் இருக்கிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.