பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பொதுமக்களில் ஒருவராக பங்குபெற்ற தனலட்சுமி மக்களின் ஆதரவை பெறாவிட்டாலும், அவர் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ளாரா இல்லையா என்பதை பார்ப்போம்.


பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகரோ, இயக்குநரோ அல்லது ஜூலி போன்ற சமூக செயல்பாட்டாளரோதான் பங்குபெறுவர். ஆனால் முதன் முறையாக இந்த ஆண்டின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மக்கள் சார்பாக இரண்டு நபர்கள் போட்டியாளராக பங்கேற்றனர். அதில், ஒருவர் ஷிவின் மற்றொருவர் தனலட்சுமி. டிக்டாக் செயலி மூலம் இவர் பிரபலமடைந்தாலும், சிலருக்கு இவர் யார் என்றே  தெரியாது என்பதே உண்மை. 


வந்த முதல் நாளிலிருந்து முகத்தை உர்ரென்று வைத்த தனலட்சுமியை, “ யார் இந்த பெண் ? இப்படி நடந்துகொள்கிறார்கள் ”என பல மக்கள் கேள்வி எழுப்பியதுடன்,   “இவரை எலிமினேட் செய்யுங்கள்.. எப்போதும் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதையும் கூச்சலிடுவதையும் தனது ஜனநாயக கடமையாக  வைத்து வருகிறார்” என்ற கமெண்டகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவின் கீழ் குவிந்தது.




இப்படி பட்ட தனலட்சுமி, பிக்பாஸின் ஸ்ட்ராங் போட்டியாளர்களான அஸிம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவருனுடன் அதிகமாக சண்டை போட்டு வந்தாலும், மற்றவர்களுடன் பல வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. பிரபலமாக இருப்பவர்களுடன் சண்டை போட்டால், தானும் பிரபலமாகலாம் என்று தனலட்சுமி நினைத்தாரோ என்னவோ, அது அப்படியே நிறைவேறியது.


பாசிட்டிவான நல்ல விஷயங்கள் எப்படி பரவுகிறதோ, அதைவிட நெகட்டிவான சில விஷயங்களும் பூகம்பம் போல் ஊரெங்கும் பரவிவிடும். அதுபோல், அனைவரின் ஆதரவை இவர் பெறாவிட்டாலும், ’ஐயோ தனலட்சுமியா.. இவரா..’ என்ற அடையாளத்தை பெற்று விட்டார். உள்ளே இவர் பல சிக்கல்களை செய்ய,  வெளியே இவரின் நண்பர்கள் சிலர், தனியார் யுடியூப் சேனல்களுக்கு தனலட்சுமியை பற்றி தவறாக பேட்டி கொடுத்து அவரை இன்னும் பிரபலமாகினார்.






12,000 ரூபாய்க்குதான் செருப்பு வாங்குவார், ரொம்ப தலைகனம் பிடித்தவர், பயமே இல்லாதவர், வசதியானவர் என்றெல்லாம் தனலட்சுமியை பற்றி அவர்கள் கூறியதற்கு, தனலட்சுமியின் அம்மா, “அதெல்லாம் இல்லை. அவளுக்கு கோபம் வரும். மற்றபடி அவளுக்கு நடிக்க தெரியாது. அதனால் மனதில் தோன்றுவதை பேசிவிடுவாள்.” என்று இன்ஸ்டா நேரலையில் பேசினார். பின்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்ட இவர், ஒரு வாரம் அமைதியாக இருந்தார். பின், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை போல், மீண்டும் அவரது பஞ்சாயத்தை துவங்கினார்.





வழக்கமாக பிக்பாஸ்தான் அனைவரையும் கண்டிப்பார், ஆனால் இவர் பிக்பாஸையே கேள்வி கேட்டார். அதன்பின், இந்த வீட்டை விட்டு நான் செல்கிறேன் என அவர் இதுவரை பலமுறை கூறியுள்ளார். இப்படி சொன்னது தவறு என்பதை உணர்ந்த அவர், “பிக்பாஸ், நான் வீட்டை விட்டு செல்கிறேன் என பல முறை கூறியுள்ளேன். அதனால் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிடாதீர்கள். இந்த இடத்திற்கு நான் கஷ்டப்பட்டு வந்துள்ளேன்.” என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.


இவரால், சில குறும்படங்களும் திரையிடப்பட்டது. ஆனால், இவர் தரப்பே இறுதியில் நியாயத்தை வென்றது. ஸ்வீட் ஸ்டால் டாஸ்க்கில் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்து ஏதோ செய்து கமலிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார். பின், மன அழுத்தத்திற்கு உள்ளான இவருக்கு ஆயிஷா ஆறுதல் கூறினார். மைனா நந்தினி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட போது, அவரை அவமதிக்கும் வகையில் நடந்து சென்றார்.


அதற்கும், கமல் தக்க பதிலடி கொடுத்தார். இப்படியாக பல சம்பங்களை செய்து கண்டிக்க படும் தனத்திற்கு தனி ரசிகர் கூட்டம் இல்லையென்றாலும் நல்ல ஓட்டுக்களை பெற்று வெளியேறாமல் இருக்கிறார். தொடர்ந்து கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் இவர், பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றாலும் இவர் டைட்டிலை வெல்வாரா என்பது பெரிய கேள்விதான். அப்படி கடைசி நேரத்தில் ஏதாவது அதிசயம் நடந்து அவர் வென்று விட்டால், அது ஆச்சரிய குறி இடம்பெறும் செய்தியாகிவிடும்.